UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 09:54 PM

எலக்ட்ரானிக் சிட்டி: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சாகு, 25. பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள தங்கும் விடுதியில் சமையல்காரராக வேலை செய்தார். எலக்ட்ரானிக் சிட்டி பிரகதி நகரில் நண்பர்களுடன், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
கடந்த 21ம் தேதி இரவு ரஞ்சித்குமாரும், அவரது நண்பர் நிதிஷும் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றனர். அந்த வழியாக ஒரு கார் வேகமாக சென்றது. மெதுவாக செல்லும்படி காரை ஓட்டியவரை பார்த்து, ரஞ்சித்குமார் சைகை காட்டினார்.
கோபம் அடைந்த கார் ஓட்டுநர், காரை திருப்பி கொண்டு வந்து ரஞ்சித், நிதிஷிடம் தகராறு செய்தார். இந்த நேரத்தில் அங்கு வந்த ரஞ்சித்தின் நண்பர்கள், காரை ஓட்டி வந்தவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது திடீரென காரை ஓட்டி வந்தவர், காரை வேகமாக பின்னோக்கி எடுத்து ரஞ்சித் மீது மோதினார். காருக்கு அடியில் ரஞ்சித் சிக்கி கொண்டார். ஆனாலும், 100 மீட்டர் துாரம் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி அங்கிருந்து தப்பினார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ரஞ்சித், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நே ற்று காலை இறந்தார்.
நிதிஷ் அளித்த புகாரில் எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, காரையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.
