/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போதை பொருள் விழிப்புணர்வுக்கு பைக் பேரணி
/
போதை பொருள் விழிப்புணர்வுக்கு பைக் பேரணி
ADDED : ஆக 28, 2025 11:10 PM
சாம்ராஜ்நகர்:பண்டிப்பூர் முதல் பீதர் வரை, பைக்கில் 1,000 கி.மீ., வரை பயணம் செய்து போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று துவங்குகிறது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'போதைப் பொருள் இல்லாத இந்தியா' எனும் தலைப்பில் சமூக விழிப்புணர்வு பேரணி இன்று துவங்குகிறது.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், விளையாட்டு, வனத்துறை, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., ஆகியோரும் இணைந்து செயல்படுவர்.
இதன் ஒரு பகுதியாக 'பைக் பேரணி' இன்று முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இப்பேரணி, சாம்ராஜ்நகர் பண்டிப்பூரில் துவங்கி பீதர் வரை 1,000 கி.மீ.,க்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'போதைப் பொருள் வேண்டாம்' என்ற பதாதைகளுடன், 20 பேர் பைக்கில் பயணம் செய்வர்.
பண்டிப்பூரில் இன்று காலை 7:00 மணிக்கு, வனத்துறை அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைப்பர். மாண்டியா, பெங்களூரு தெற்கு, பெங்களூரு, துமகூரு, சித்ரதுர்கா, ஹம்பி மற்றும் பல இடங்கள் வழியாக சென்று இறுதியாக பீதரை அடையும்.
இவர்கள் செல்லும் வழிகளில் போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதற்காக, பள்ளி, கல்லுாரிகளில் கலந்துரையாடல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் தன்னார்வலர்கள், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து மனித சங்கிலி நடத்தப்படும்.
பைக்கில் செல்வோருக்கு உணவு, ஓய்வெடுப்பதற்கான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.