/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - சென்னை விரைவு சாலையில் பைக், ஆட்டோ, டிராக்டர்களுக்கு தடை
/
பெங்களூரு - சென்னை விரைவு சாலையில் பைக், ஆட்டோ, டிராக்டர்களுக்கு தடை
பெங்களூரு - சென்னை விரைவு சாலையில் பைக், ஆட்டோ, டிராக்டர்களுக்கு தடை
பெங்களூரு - சென்னை விரைவு சாலையில் பைக், ஆட்டோ, டிராக்டர்களுக்கு தடை
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM
கோலார்: 'பெங்களூரு - சென்னை விரைவு சாலையில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்தியாவில் முதல் பசுமை வழி விரைவுச் சாலையாக கருதப்படும், பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, 17,900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவுச் சாலையின் நோக்கமே இரு நகரங்களுக்கு இடையேயான 7 மணி பயண நேரத்தை 3 மணி நேரமாக குறைப்பது தான்.
பெங்களூரு முதல் தங்கவயல் டோல்கேட் வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதனால் இவ்வாண்டு பிப்ரவரியில் இருந்து வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் நுழைவதை தடை செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 25-ல் ஏற்கனவே ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இருப்பினும், இருசக்கர வாகன போக்குவரத்து, தடையின்றி தொடர்ந்தது.
அதிவேக பயணத்திற்காக அமைக்கப்பட்ட இந்த சாலையில் தடையை மீறிச் சென்றதால் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நேர்ந்துள்ளன. 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து, மேலும் விபத்துகளை நடக்காமல் தடுக்க கோலார், தங்கவயல் போலீசார் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர்களின் இயக்கத்தை தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக ஆங்காங்கே அறிவிப்பு பதாகைகளை கோலார் மாவட்ட போலீஸ் துறை வைத்துள்ளது. ரோந்து பணியையும் போலீசார் அதிகப்படுத்தியுள்ளனர்.
தடையை மீறி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும் அபராதம் விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.