ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் சட்டசபையில் தாக்கலாகிறது மசோதா
ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் சட்டசபையில் தாக்கலாகிறது மசோதா
ADDED : மார் 14, 2026 06:44 AM
பெங்களூரு: ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் இயற்றப்பட உள்ளது. இதற்கான மசோதா சட்டசபையில் தாக்கலாக உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று முன்தினம் இரவு அமைச்சரவை கூட்டம் நடந்தது. ஜாதி மறுப்பு திருமணம் செய்வதால் நடக்கும், ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் இயற்றும் மசோதாவை, சட்டசபையில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்தொடரிலேயே, அதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளனர்.
காதலித்து கலப்பு திருமணம் செய்ய நினைப்போர், யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளவும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மிரட்டல் வருவதையும், இந்த சட்டம் தடுக்கும்.
ஜாதி, கலாசாரம், பாரம்பரியம் என்ற பெயரில், ஆணவ கொலைகள் நடப்பது தடுக்கப்படும். கலப்பு திருமணம் செய்யும் காதல் ஜோடியை உடல் ரீதியாக தாக்குவதும் குற்றமாகவே கருதப்படும்.
கலப்பு திருமணம் செய்வோரை கடத்தி செல்வது, சமூக ரீதியாக ஒதுக்குவது, குடும்பத்தினர், உறவினர்களை வலுக்கட்டாயமாக கிராமத்தை விட்டு வெளியேற்றுவது, அவர்களை பற்றி அவதுாறு பரப்புவதை தடுக்கும் வகையிலும், மசோதாவில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஆணவ கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், கடுமையான தாக்குதல் மூலம் காயப்படுத்துவோருக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம், சிறிய தாக்குதலுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு சிறை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஜாதி எதிர்ப்பு காதல் திருமணங்களை பிரித்து வைக்க பஞ்சாயத்து நடத்துவதும், புதிய மசோதா மூலம் தடை செய்யப்படும்.
திருமணம் செய்வதாக கூறி, பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு, ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததால், பலாத்கார வழக்காக கருதும் வகையில், மசோதாவில் விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படுவோருக்கு, குறைந்தது, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதாவுக்கு 'ஏவ நமவ' என, பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
