ADDED : செப் 29, 2025 06:10 AM

மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும், 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் பொறுப்பு, அபிமன்யு என்ற யானை வசம் உள்ளது. அம்பாரியை சுமப்பதால் அபிமன்யு மீது, மக்களுக்கு மதிப்பு உள்ளது. ஆனால், அபிமன்யுவை காட்டிலும், பீமா என்ற யானைக்கு மவுசு அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பும் யானையாக பீமா உள்ளது.
பலத்திலும் அபிமன்யுவை விட, பீமா தான் உயர்ந்தது. அபிமன்யு, 5,360 கிலோ; பீமா உடை 5,465 கிலோ. 25 வயதான பீமா யானை, மைசூரின் எச்.டி.கோட் தாலுகா நாகரஹொளே முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சரியாக 22 ஆண்டுகளுக்கு முன், நாகரஹொளே மத்திகேகூடு வனப்பகுதியில் உள்ள கிராமத்திற்குள் குட்டி யானையாக புகுந்தது. அதை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் கிராம மக்கள்.
அந்த குட்டியை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயன்றனர். மூன்று முறை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. குட்டி யானையை, தாங்களே வளர்ப்பது என்று முடிவு செய்து, நாகரஹொளே முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அந்த யானைக்கு பீமா என்று பெயர் சூட்டி, குல்லாராமா என்ற பராமரிப்பாளரிடம் கொடுத்தனர். பொதுமக்களிடம் எப்படி சகஜமாக பழக வேண்டும்; எப்படி குழந்தை தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளித்து வளர்த்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக, தசரா ஊர்வலத்தில் பங்கேற்க, பீமா யானை தேர்வு செய்யப்பட்டது. 'லவ் யு பீமா' என்று கூறினால், தும்பிக்கையை உயர்த்தி நன்றி சொல்லும். அபிமன்யு ஓய்வுக்கு பின், அம்பாரியை சுமக்கும் பொறுப்பையும் ஏற்க தயாராக உள்ளது.