/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பறவை காய்ச்சல் பரவல் கோழி, முட்டைக்கு தடை
/
பறவை காய்ச்சல் பரவல் கோழி, முட்டைக்கு தடை
ADDED : பிப் 20, 2025 06:41 AM

பெங்களூரு: ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுவதால், அம்மாநிலங்களிலிருந்து கோழி, முட்டை வாங்க கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் 'எச்5என்1' வைரசால் ஏற்படும் தொற்றால் கோழிகள் இறந்து வருகின்றன. மஹாராஷ்டிராவில் புலி, சிறுத்தைகளுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
ஆந்திராவின் கூடூர், நெல்லுார், நாயுடுபேட்டை, வெங்கடகிரி பகுதிகளில் கோழிக் கடைகளில் கோழிகள் தொடர்ந்து இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் இதுவரை பறவை காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. எனினும், அண்டை மாநிலங்களில் பரவல் வேகமாக இருப்பதால், இங்கும் பரவிவிடுமோ என்று பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூன்று மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டு, கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
மூன்று மாநிலங்களில் இருந்தும் கோழி, முட்டை வாங்க கர்நாடக இறைச்சி, முட்டை டீலர்களுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

