பெங்களூரில் பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பெங்களூரில் பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : ஏப் 18, 2026 06:00 AM
யாத்கிர்: நாட்டின் பல்வேறு பகுதிகளில், மக்களை அச்சுறுத்திய பறவை காய்ச்சல், தற்போது பெங்களூரிலும் நுழைந்து ள்ளது. எனவே, சுகாதாரத்துறையினர் உஷாராகி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரு புறநகரின் ஹெசரகட்டாவில் உள்ள, அரசு கோழிப்பண்ணையில், 'ஹெச்5என்1' வைரஸ், அதாவது பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பண்ணையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கோழிகள் அனுப்பப்படுகின்றன. 'ஹெச்5என்1' வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின், உடனடியாக பண்ணையை மூடினர். கோழிகளை பள்ளம் தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிய ஊழியர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், 'ஹெச்5என்1' வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. சுற்றுப்பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என, கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஹெச்5என்1' வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பண்ணையில் இருந்து, ஒரு கி.மீ., சுற்றுப்பகுதிகளில் உள்ள, அனைத்து கோழிகளையும் அழிக்க ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.
கோழி இறைச்சி மற்றும் முட்டை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எங்காவது கோழிகள் திடீரென இறந்தால், உடனடியாக கால் நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையிடமாவது கூற வேண்டும்.
பறவை காய்ச்சல் பீதி இருப்பதால், கோழி இறைச்சி, முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பாதி வெந்த இறைச்சி, முட்டையை சாப்பிடக்கூடாது. இறைச்சியை வெட்டிய பின், கைகளையும், பயன்படுத்திய பொருட்களையும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இறந்த அல்லது உடல் நிலை பாதித்த பறவைகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள், தங்களின் பண்ணைக்குள் வெளியாட்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும். பண்ணைக்கு சென்று வந்த பின், கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும். பண்ணையில் முக கவசம் அணிந்திருப்பது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
