/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., கிண்டல்; வனத்துறை அமைச்சர் 'டென்ஷன்'
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., கிண்டல்; வனத்துறை அமைச்சர் 'டென்ஷன்'
பா.ஜ., - எம்.எல்.ஏ., கிண்டல்; வனத்துறை அமைச்சர் 'டென்ஷன்'
பா.ஜ., - எம்.எல்.ஏ., கிண்டல்; வனத்துறை அமைச்சர் 'டென்ஷன்'
ADDED : ஏப் 15, 2025 08:42 PM

பீதர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 134வது அம்பேத்கர் ஜெயந்தி விழா நடந்தது. இதில், பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் கன்ட்ரே, பீதர் தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சைலேந்திர பெல்டேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் ஏறிய அனைவரும் அம்பேத்கரை பற்றி புகழ்ந்து பேசினர். அப்போது, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவிற்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. வழக்கம்போல, தன் ஸ்டைலில் பேச்சை துவங்கினார் அமைச்சர்.
அவர் பேசுகையில், “அம்பேத்கர் ஒரு தலைவர் மட்டுமல்ல, அவர் அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய சின்னமாக உள்ளார். சாதி அமைப்பை தன் எழுத்துக்கள், போராட்டங்கள் மூலம் தொடர்ந்து எதிர்த்து வந்தார்,” என்றார். இடையிடையே காங்கிரஸ் செய்த சாதனைகளையும் கூறினார்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., சைலேந்திர பெல்டேல், தன் வாய்ப்புக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் தன் பங்கிற்கு அம்பேத்கரை பற்றி புகழ்ந்து பேசினார். பின், பா.ஜ.,வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் புகழ்ந்து பேசினார்.
அப்போது அவர், “வனத்துறை அமைச்சரை அம்பேத்கர் பற்றி பேச சொன்னால், தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே,” என அமைச்சரை சீண்டினார்.
இதனால் விழாவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஈஸ்வர் கன்ட்ரே, மைக்கை எடுத்து, “நான் உண்மையை தான் கூறினேன். இதற்கு ஏன் இப்படி என்னை பற்றி கீழ்த்தரமாக பேச வேண்டும்? மீண்டும் என்னை பற்றி ஏதாவது கூறினால், மேடையில் இருந்து பாதியிலே கிளம்ப வேண்டி இருக்கும்,” என எச்சரித்து, தன் இருக்கையில் அமர்ந்தார்.
இந்த களேபரம் காரணமாக அமைச்சர், எம்.எல்.ஏ., இருவரது முகங்களும் இறுக்கமாக காணப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., - காங்., தொண்டர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
தற்போது, இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- நமது நிருபர் -

