பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது முட்டை வீச்சு காங்கிரஸ் கட்சியை கண்டித்து போராட்டம்
பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது முட்டை வீச்சு காங்கிரஸ் கட்சியை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 23, 2026 11:10 PM

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது முட்டை வீசிய காங்கிரசை கண்டித்து, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன் அக்கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
டில்லியில், சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தியபோது, காங்கிரசார் வீசிய முட்டை பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது விழுந்தது.
இதை கண்டித்து, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கைதானவர்கள் எங்கே? அப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பலமுறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இப்போது நீங்கள் ராஜினாமா கேட்கிறீர்கள். அப்போது காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா செய்தாரா... துரோகியான கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்துகிறது. அது அமெரிக்காவில் பிறந்த கட்சி.
காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது. வெளிநாட்டு பணத்தில் டில்லியில் போராட்டம் நடத்தப்படுகின்றன. நாடு அழிந்தாலும், தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று காங்கிரசார் நினைக்கின்றனர்.
எம்.எல்.ஏ., மீதான தாக்குதலை விசாரிக்க வேண்டும். தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறும் போலீசார், தாக்கியவர்களை எங்கு வைத்துள்ளனர்... எந்த பிரிவின் கீழ் கைது செய்தனர்; காங்கிரசின் அழுத்தத்துக்கு போலீசார் பணிந்துள்ளனர்.
ஒரு எம்.எல்.ஏ., தாக்கப்பட்டபோதும், போலீசார் மவுனமாக இருப்பது குற்றமாகும். இந்த அரசு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதன் பின், ஜனநாயக அரசு வரும். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாடகம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் குண்டர்கள், அவர்களை தாக்கினர். ராகுல், 20 நாட்களாக வெளிநாட்டில் இருந்தார். கரப்பான் பூச்சி கட்சி, 20 நாட்களாக அமைதியாக போராடி வந்தது.
ராகுல் வந்த பின், நாடகம் துவங்கி உள்ளது. அவர், குண்டர்களை விட்டு, போலீசாரை தாக்கினார். இதற்கு எதிராக நேற்று முன்தினம் பெங்களூரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
பணியிடங்களை நிரப்ப கோரி ஹூப்பள்ளியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் எங்கு சென்றார்... பிரசார மோகத்தால், 11 ஆர்.சி.பி., ரசிகர்களை காங்கிரஸ் கொன்றது. நீட் தேர்வு கசிவு குறித்து லோக்சபாவில் விவாதிக்கலாம் என்று அழைத்தால் வருவதில்லை. இளைஞர்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.
காங்கிரஸ் தலைமை பதவிக்காக ராகுல், பிரியங்கா இடையே போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, அவர்கள் இளைஞர்களுடன் கைகோர்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
