பெண்ணை மிரட்டியதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
பெண்ணை மிரட்டியதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : செப் 11, 2026 02:38 AM

பெங்களூரு: பாலியல் வழக்கை வாபஸ் பெறும்படி, பெண்ணை மிரட்டியதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில், 35 வயது பெண் அளித்த புகார்:
எனக்கும், ரவிசங்கர், 41, என்பவருக்கும், கடந்த 2018ல் பழக்கம் ஏற்பட்டது. 2021ல், என்னை டில்லிக்கு அழைத்து சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். நான் அளித்த புகாரில், டில்லி சாணக்யபுரி போலீசார் ரவிசங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, அவரது ஆதரவாளர்கள் கிரண் நாயுடு, லோகித், மஞ்சுநாத், லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யண்ணா ரெட்டி, லோஹித், எஸ்.ஐ., சந்திரசேகர் எனக்கு அடிக்கடி மிரட்டல் விடுக்கின்றனர்.
தற்போது எனது ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
புகாரின்படி, முனிரத்னா உட்பட எட்டு பேர் மீதும், எட்டு பிரிவுகளில் ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முனிரத்னா மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு உள்ளது. அதை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. இந்த புதிய வழக்கும் எஸ்.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
