ADDED : செப் 11, 2026 02:27 AM

பெங்களூரு: அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 37 மணி நேரம் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கர்நாடக பொது பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. இவர் உகாண்டா, ருவாண்டா நாடுகளில் உள்ள சுரங்க நிறுவனங்கள், பள்ளிகளில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்ததாக கிடைத்த தகவலின்படி, ஈ.டி., எனும் அமலாக்கத்துறை, அமைச்சரின் அரசு பங்களா, வீடுகள், சதீஷின் மகளும், எம்.பி.,யுமான பிரியங்காவின் வீடு உட்பட 18 இடங்களில் நேற்று முன்தினம் காலை சோதனை நடத்தியது.
நேற்று முன்தினம் 15 இடங்களில் சோதனை முடிந்த நிலையில், அமைச்சரின் அரசு பங்களா, கோகாக்கில் உள்ள வீடு, அமைச்சர் உறவினர் மஞ்சுநாத் வீடுகளில், நேற்று 2வது நாளாக சோதனை நடந்தது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதுதவிர கோகாக், பெலகாவியில் உள்ள வீடுகளில் இருந்து கணக்கில் வராத, மூன்று கோடி ரூபாய் சிக்கியது.
அவற்றை பெட்டியில் அடைத்து, வங்கிக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். அரசு பங்களாவில் மட்டும் நேற்று முன்தினம் காலை 6:30 மணியில் இருந்து, நேற்று இரவு 7:30 மணி வரை என, 37 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.
மொத்தத்தில் அனைத்து இடத்திலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது.
