தங்கவயலில் ஊழல் தாண்டவம் பா.ஜ.,வின் சம்பங்கி குற்றச்சாட்டு
தங்கவயலில் ஊழல் தாண்டவம் பா.ஜ.,வின் சம்பங்கி குற்றச்சாட்டு
ADDED : மே 08, 2026 12:25 AM

தங்கவயல்: ''தங்கவயலில் அனைத்து துறைகளிலும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையையும் நடப்பதில்லை,'' என்று தங்கவயல் பா.ஜ., -முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி குற்றம் சாட்டினார்.
தங்கவயலில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 50 ஆண்டுகளாக பா.ஜ.,வை வளர்த்தவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா. அவரின் மகத்தான சேவையால் தான் விவசாயிகள், தொழிலாளர்கள் பா.ஜ.,வை ஆதரித்தனர். தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிக்கு, கர்நாடகாவை நுழைவாயிலாக ஆக்கினார்.
அவரது சேவையை போற்றும் வகையில் நாளை சித்ரதுர்காவில், 'அபிமானோத்சவா' -கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் தங்கவயல் தொகுதியில் இருந்து 100 வாகனங்கள் மூலம் பா.ஜ.,வினர் பங்கேற்கிறோம். மேற்கு வங்கத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்து, பா.ஜ., ஆட்சி அமைகிறது.
தங்கவயல் தொகுதியில், கோலாரை சேர்ந்தவர் பினாமி எம்.எல்.ஏ.,வாக செயல்பட்டு வருகிறார். தங்கவயலில் அனைத்து துறைகளிலும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. லஞ்சம் இல்லாமல் எந்தவொரு வேலையும் நடப்பதில்லை. தங்கவயலில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, நகர பகுதி பா.ஜ., தலைவர் சுரேஷ்குமார், கிராம பகுதி தலைவர் லட்சுமி நாராயணா, பாபி சுரேஷ், பாண்டியன் உடன் இருந்தனர்.
