/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு லஞ்சம் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
/
அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு லஞ்சம் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு லஞ்சம் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு லஞ்சம் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
ADDED : அக் 16, 2025 11:17 PM

மைசூரு: “மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மைசூருக்கு ஏ.சி.பி.,யாக இடமாற்றம் வேண்டுமானால், ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது,” என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றஞ்சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரிலும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் நிர்வாகம் முடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டராக 75 லட்சம் ரூபாய், எஸ்.ஐ.,யாக 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். மைசூருக்கு ஏ.சி.பி.,யாக இடமாற்றப்பட, ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
இப்போது பணியாற்றுவோர், அரசு அதிகாரிகள் அல்ல; எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள். எம்.எல்.ஏ.,க்கள் அந்தந்த தொகுதிகளின் எஜமானர்களாக உள்ளனர். அதிகாரிகளை முதல்வரின் மகன் யதீந்திராவும், அவரது நண்பர்களும் இடமாற்றம் செய்கின்றனர்.
வாக்குறுதி திட்டங்களுக்கு செலவிடுவது, மக்கள் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்தது. அமைச்சர்கள் வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது ஏன் என்பது புரியவில்லை. அமைச்சர்கள், முதல்வரின் அடிமைகளா?
பெண்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக, அரசு சார்ந்த சர்க்கரை தொழிற்சாலையை சீரமைத்தால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். அதை செய்யாமல் முதல்வர் தன் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., தேர்வில் தேர்ச்சி பெற, 33 சதவீத மதிப்பெண்கள் போதும் என நிர்ணயித்தது சரியல்ல. இதன் விளைவாக கல்வியின் தரம் குறையும். அரசு மூளையில்லாமல் முடிவு செய்கிறது. இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும். கல்வியில் அவர்களின் ஆர்வம் குறையும்.
குறிப்பாக சில அரசு பணிகள், தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க, 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையால், 33 சதவீதம் பெற்ற மாணவர்களின் கதி என்ன?
சர்வே பணிகளில், ஆசிரியர்கள் பிசியாக உள்ளனர்; பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடம், மதிய உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்த அரசு, எந்த விஷயத்திலும் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கிறது. முதல்வர் யாருடைய பேச்சையும் கேட்பது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.