/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
/
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
ADDED : மே 27, 2025 11:35 PM

பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், 67. உத்தர கன்னடா யல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், 68. இவர்கள் 2 பேரும் முன்பு காங்கிரசில் இருந்தவர்கள். காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்த 17 பேரில், இவர்கள் இருவரும் அடங்குவர்.
கடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். சோமசேகர் கூட்டுறவு; சிவராம் ஹெப்பார் தொழிலாளர் நலத் துறைக்கு அமைச்சர் ஆகினர். கடந்த 2023 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பின் காங்கிரசுடன் நெருக்கம் காட்டினர்.
கட்சி மாறி ஓட்டு
குறிப்பாக சோமசேகர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். துணை முதல்வர் சிவகுமாரை அடிக்கடி சந்தித்தும் பேசினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த, ராஜ்யசபா தேர்தலில் சோமசேகர் கட்சி மாறி, காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டார்.
சிவராம் ஹெப்பார் தேர்தலை புறக்கணித்தார். கட்சி நடத்தும் கூட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் இருவரும் பங்கேற்கவில்லை. கட்சி விரோத செயலில் ஈடுபடும் இருவரையும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று, கர்நாடக பா.ஜ., தலைவர்கள், மேலிடத்திற்கு பகிரங்க கோரிக்கை வைத்தனர்.
எத்னால் நீக்கம்
இதையடுத்து சோமசேகர், சிவராம் ஹெப்பாருக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் விளக்கம் அளித்து இருந்தனர். இதற்கிடையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ., மேலிடம் கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகள் நீக்கியது.
'எத்னாலுக்கு ஒரு நியாயம், சோமசேகர், சிவராம் ஹெப்பாருக்கு ஒரு நியாயமா' என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் சோமசேகர், சிவராம் ஹெப்பாரை பா.ஜ.,வில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி, பா.ஜ., மத்திய ஒழுங்கு கமிட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
ஒழுங்கு கமிட்டியின் செயலர் ஓம் பதக் வெளியிட்ட அறிவிப்பில், 'கடந்த மார்ச் 25ம் தேதி மத்திய ஒழுங்கு குழு அனுப்பிய நோட்டீசுக்கு நீங்கள் அளித்த பதிலை, நாங்கள் பரிசீலித்தோம். ஆனாலும் தொடர்ந்து கட்சிக்கு எதிராக நீங்கள் செயல்பட்டு வந்தீர்கள். இதனால் உங்களை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்குகிறோம். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. தற்போது நீங்கள் வகிக்கும் கட்சி பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அமாவாசை தினம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சோமசேகர் அளித்த பேட்டி:
அமாவாசை தினத்தன்று நல்லது செய்து உள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது. காலை 8:30 மணிக்கு எனது மொபைல் போனை பார்த்தேன். 'வாட்ஸாப்' நம்பருக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் வந்தது. முன்பு எனக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
'நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராக வேலை செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று விளக்கம் அளித்து இருந்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் எனது அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன். என்னை கட்சியில் இருந்து நீக்குவர் என்று 100 சதவீதம் எனக்கு முன்கூட்டியே தெரியும். எப்போது என்று தான் காத்து இருந்தேன்.
எத்னாலுக்கும், எனக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவரை போன்று கட்சியின் தலைவர்களை நான் கீழ்மட்டமாக பேசவில்லை. எடியூரப்பாவின் பெயரை எத்னால் சேதப்படுத்திய அளவுக்கு, எந்த அரசியல் தலைவரும் செய்யவில்லை.
12 பேர் ராஜினாமா
விதான் சவுதாவில் வைத்து பெண்ணை பலாத்காரம் செய்தவர்; எதிர்க்கட்சி தலைவருக்கு எச்.ஐ.வி., ஊசி போட முயன்றவர்; நடக்காத பணிக்கு பில் கொடுத்து பணம் வாங்கியவர் எல்லாம், பா.ஜ., கட்சியில் இன்னும் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முதலில் அந்த நபரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தவர்களுக்கு, சாமுண்டீஸ்வரி தாய் நல்லது செய்யட்டும். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.,வில் இருந்து 12 பேர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வர்.
என்னை கட்சியில் இருந்து நீக்கியதில், விஜயேந்திராவின் பங்களிப்பு எதுவும் இல்லை.
என்னை அரசியல்ரீதியாக வளர்த்தது, துணை முதல்வர் சிவகுமார் தான். நான் காங்கிரசில் இருந்த போது பெங்களூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆக்கியது சிவகுமார், பரமேஸ்வர், சித்தராமையா தான். கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளேன்.
கட்சி மாறிவிட்டேன் என்பதால், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச கூடாதா, எனது தொகுதிக்கு நிதி கேட்க கூடாதா.
எனக்கு பா.ஜ., ஒழுங்கு குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னிடம் பேசினார். அவரிடம் எனது பிரச்னைகளை சொன்னேன். சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவராம் ஹெப்பார் அளித்த பேட்டி:
காலம் பதில் சொல்லும்
என்னையும், சோமசேகரையும் கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகள் நீக்கி உள்ளனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இருந்தாலும் கட்சியின் முடிவை வரவேற்கிறேன்.
கூடிய விரைவில் நானும், சோமசேகரும் கூட்டாக ஊடகத்தினரை சந்தித்து பேசுவோம். கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் எங்களை அழைக்கவில்லை.
கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, எனக்கு சீட் கொடுக்க உள்ளூர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், சமாதானம் ஆனது போன்று பேசினர். 'பி பார்ம்' கொடுத்த பின், என்னை தோற்கடிக்க சதி செய்தனர்.
அத்தனை சதியையும் முறியடித்து வெற்றி பெற்றேன். என்னை தோற்கடிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறினேன். ஆனால், என்னை நீக்கி உள்ளனர். எல்லாவற்றுக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோமசேகர், சிவராம் ஹெப்பார் நீக்கத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.