/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: காங்., அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிரடி
/
எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: காங்., அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிரடி
எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: காங்., அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிரடி
எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: காங்., அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிரடி
ADDED : ஏப் 04, 2025 06:54 AM

கர்நாடகாவில் அத்தியாவசிய பொருட்கள் விலையை, தொடர்ந்து உயர்த்தி வரும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜ., நேற்று முன்தினம் காலையில் இருந்து, பகல், இரவு போராட்டத்தை துவங்கியது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை தலைவர் சலவாதி நாராயணசாமி, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
உருவ பொம்மை எரிப்பு
நேற்று முன்தினம் இரவு போராட்ட களத்திலேயே, விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் துாங்கினர். நேற்று காலை அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். சுதந்திர பூங்காவில் குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்திய, பா.ஜ., தொண்டர்கள் சிலர் திடீரென சாலைக்கு வந்து போராட துவங்கினர்.
அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்களின் உருவப்படம் இருந்த 10 தலை உருவ பொம்மையை சாலையில் போட்டு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின், முதல்வரின் இல்லத்தை நோக்கி பேரணியாக புறப்பட தயாராகினர். சாலையின் நடுவே இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்பு கம்பிகள் மேல், பா.ஜ., தொண்டர்கள் ஏற ஆரம்பித்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போது, போலீசார், பா.ஜ., தொண்டர்கள் இடையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் தொண்டர்களும் தங்கள் பங்கிற்கு, பேரணி செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த திடீர் போராட்டத்தால் சுதந்திர பூங்காவை சுற்றியுள்ள சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதந்திர பூங்காவில் இருந்து அனந்தராவ் சதுக்கம் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தை கைவிடும்படி கேட்டு கொண்டாலும், பா.ஜ., தொண்டர்கள் கேட்கவில்லை.
இதனால் வேறு வழியின்றி பா.ஜ., தொண்டர்களை கைது செய்த போலீசார், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் எடியூரப்பா, அசோக், விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களையும் பஸ்களில் ஏற்றி போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கண்டன பேரணி
இதையடுத்து, விஜயேந்திராவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:
காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகம், விலைவாசி உயர்வு தொடர்பாக கடந்த 24 மணி நேரம் பா.ஜ., நடத்திய போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இதற்காக கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கும், குறிப்பாக எடியூரப்பாவுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் போராட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்தார். நாங்கள் நடத்திய போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வரும் 7ம் தேதி காங்கிரஸ் அரசின் ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பொது கண்டன பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.