/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கைது
/
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கைது
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கைது
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கைது
ADDED : பிப் 13, 2026 05:31 AM

பெங்களூரு: பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், பெங்களூரு விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார் என்கிற பிக்லு சிவா, 47, கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வீட்டின் அருகே, நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். சிவகுமார் தாய் அளித்த புகாரில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது ஆதரவாளர்கள் ஜெகதீஷ், கிரண், விமல், நவீன், பேட்ரிக், சந்தோஷ் உள்ளிட்டோர் மீது பாரதிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கின் முதல் குற்றவாளியாக ஜெகதீஷ், ஐந்தாவது குற்றவாளியாக பைரதி பசவராஜ் சேர்க்கப்பட்டனர். வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது. கொலைக்கு பின் ஜெகதீஷ் துபாய் தப்பி சென்றார். தேடப்படும் குற்றவாளி என்று லுாக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால், துபாயில் இருந்து திரும்பி வந்த ஜெகதீஷ், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கும்பமேளா இதற்கிடையில், பாரதிநகர் போலீஸ் நிலையத்தில், பைரதி பச வராஜ் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் இரண்டு முறையும் கொலைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜெகதீஷ் யார் என்றே தெரியாது என்று கூறினார். ஆனாலும் பைரதி பசவராஜுக்கும், ஜெகதீசுக்கும் தொடர்பு இருந்ததை, சி.ஐ.டி., அதிகாரிகள் உறுதி செய்தனர்.
அவர்கள் இருவரும் உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு சென்ற புகைப்படங்கள், மொபைல் போன் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்தனர். பைரதி பசவராஜை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதில் இருந்து தப்பிக்க, பைரதி பசவராஜ் முன்ஜாமின் பெற முயன்றார். ஆனாலும், அவரது மனு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முதலில் தள்ளுபடி ஆனது.
தொடர்பு இல்லை கடந்த 10ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆன நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடினார். தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி அமர்வு நேற்று விசாரித்தது. பைரதி பசவராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி வாதிடுகையில்,'வழக்கின் முதல் குற்றவாளியான ஜெகதீசுடன், எனது மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் குற்றவாளியை யார் என்றே, மனுதாரருக்கு தெரியாது' என்றார்.
சி.ஐ.டி., தரப்பு வக்கீல் சித்தார்த் லுாத்ரா, ஜெகதீசுக்கும், பைரதி பசவராஜுக்கும் இடையான உரையாடல், அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமர்பித்து, முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார். தேவைப்பட்டால் அவர் சரண் அடையட்டும். பின், ஜாமின் கேட்டு விண்ணப்பிக்கட்டும் என்றும் கூறினார்.
மொபைல் அழைப்புகள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பைரதி பசவராஜின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ''மனுதாரர் மக்கள் பிரதிநிதி என்பதால், தைரியமாக வந்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
நீதிபதி ஜாய்மல்யா பாக்சி கூறுகையில், ''வழக்கின் முதல் குற்றவாளியை தெரியாது என்று மழுப்பலான நிலைப்பாட்டை இங்கு கூறி உள்ளீர்கள். ஆனால் மொபைல் போன் அழைப்புகள் வேறு விதமாக கூறுகின்றன,'' என்றார்.
ஆமதாபாத் உச்ச நீதிமன்றத்திலும் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதால், பைரதி பசவராஜ் எந்த நேரத்திலும், சி.ஐ.டி., முன்பு சரண் அடையலாம் என்று கூறப்பட்டது. அதன்படி குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து பெங்களூருக்கு, நேற்று மாலை பைரதி பசவராஜ் விமானத்தில் புறப்பட்டார்.
விமான நிலையத்தின் முதல் முனையத்தில் காத்திருந்த, சி.ஐ.டி., அதிகாரிகள், விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த, பைரதி பசவராஜை கைது செய்தனர். நேராக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கைது பின்னணியில் அரசியல்?
பைரதி பசவராஜ் முன்பு காங்கிரசில் இருந்தவர். கடந்த 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி மீதான அதிருப்தியில், பதவியை ராஜினாமா செய்த 17 பேரில் இவரும் ஒருவர். இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த 2023 தேர்தலிலும் வெற்றி பெற்றார். கர்நாடக பா.ஜ., துணை தலைவராகவும் பணியாற்றினார். காங்கிரஸ் அரசை விமர்சித்தும் பேசினார்.
சிவகுமார் கொலையில் பைரதி பசவராஜ் பெயர் அடிபட்டதுமே, அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையால் அவரை கைது செய்ய முடியவில்லை. இறுதியாக ஏழு மாதங்களுக்கு பின், தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்களின், அரசியல் அழுத்தமும் இருக்கலாம் என்றும் பேச்சு அடிபட ஆரம்பித்து உள்ளது.

