/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை
/
கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை
ADDED : ஜூலை 24, 2025 06:21 AM

பெங்களூரு : பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேற்று இரண்டாவது முறை, விசாரணைக்கு ஆஜரானார். காலை 11:30 மணியில் இருந்து மதியம் 2:30 மணி வரை அவரிடம், ஏ.சி.பி., பிரகாஷ் ராத்தோட் விசாரணை நடத்தினார்.
பெங்களூரு பாரதிநகரை சேர்ந்தவர் சிவகுமார், 44; ரவுடி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். கடந்த 15ம் தேதி இரவு தன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவானது.
வழக்கின் முதல் குற்றவாளியாக எம்.எல்.ஏ.,வின் தீவிர ஆதரவாளர் ஜெகதீஷ் சேர்க்கப்பட்டார். கொலை தொடர்பாக ஜெகதீஷின் நெருங்கிய கூட்டாளி கிரண், இவரது கூட்டாளிகள், கோலார் மாலுாரை சேர்ந்த கூலிப்படையினர் என, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேற்று இரண்டாவது முறை, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். காலை 11:30 மணியில் இருந்து மதியம் 2:30 மணி வரை அவரிடம், ஏ.சி.பி., பிரகாஷ் ராத்தோட் விசாரணை நடத்தினார்.
ஆஜராக சம்மன் விசாரணைக்கு பின், பைரதி பசவராஜ் அளித்த பேட்டி:
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன். விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்கு, எனக்கு தெரிந்த பதிலை அளித்துள்ளேன். கொலையான சிவகுமார் யார் என்றே எனக்கு தெரியாது.
நான் அவரை மிரட்டியதாக சில மாதங்களுக்கு முன்பு, போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவருக்கு ஏதாவது மிரட்டல் இருந்தால், என்னிடமே தெரிவித்திருக்கலாம். என் மீது புகார் அளித்த பின், போலீசாரும் என்னை அழைத்து விசாரித்திருக்கலாம். எதுவும் செய்யாமல் இப்போது என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீதி துறை மீது நம்பிக்கை உள்ளது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் உள்ளது. மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர். தேதி குறிப்பிடவில்லை. மொபைல் போனில் தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாய்க்கு ஓட்டம் இதற்கிடையில் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெகதீஷ் தலைமறைவானார். அவர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின்படி, சென்னையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு, ஜெகதீஷ் தப்பிச் சென்றது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. சிவகுமார் கொலைக்கு பின் ஹலசூரில் இருந்து, காரில் புறப்பட்ட ஜெகதீஷ், கே.ஆர்.புரம், பாகலுார் வழியாக சென்னை சென்றுள்ளார். பாகலுாரில் வைத்தே தன் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார்.
ஜெகதீஷ் துபாய்க்கு சென்றதை போலீசார் உறுதி செய்துள்ளனர். துபாயில் இருந்து சார்ஜா அல்லது அபுதாபிக்கு சென்று இருக்கலாம் என்றும், போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கைது செய்ய, மத்திய அரசின் அனுமதியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும், பெங்களூரு போலீசார் தயாராகி வருகின்றனர்.