/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்.,கின் கையை வைத்தே அதன் கண்ணை குத்திய பா.ஜ.,
/
காங்.,கின் கையை வைத்தே அதன் கண்ணை குத்திய பா.ஜ.,
ADDED : ஆக 06, 2025 08:55 AM

லோக்சபா தேர்தல் ஓட்டு முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசை, அதன் கையை வைத்தே கண்ணை குத்தும் வகையில், பரமேஸ்வர் பேசும் பேச்சை, பா.ஜ., வெளியிட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவில் முறைகேடு நடந்ததாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
ஆனாலும், 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், உங்கள் ஓட்டை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் நேற்று, பெங்களூரு சுதந்திர பூங்காவில் ராகுல் தலைமையில் போராட்டம் நடக்கவிருந்தது. இப்போராட்டம் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவால், வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வகையில், லோக்சபா தேர்தலின்போது, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், 'ஓட்டு சீட்டு முறைகேடு' குறித்து பேசும் வீடியோவை, கர்நாடக பா.ஜ., தன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ளது.
வீடியோவில், 'ஓட்டுச்சீட்டு பதிவு முறையில் நடந்த தேர்தலில், எங்களுக்கு அழுத்தம் இருந்தது. ஓட்டுச்சாவடியில் பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது' என்று பேசியிருந்தார்.
சட்டவிரோதமாக ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றி, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதை வெளிப்படையாகவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், தங்களின் வெற்றி பறிபோனதை எண்ணி அழுகின்றனர். இத்தகையோர், ஓட்டு திருட்டு என கூறி போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
- நமது நிருபர் -