/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னரை காக்க வைத்த காங்., அரசு மீது பா.ஜ., விளாசல்! உரை நிகழ்த்த முதல்வருக்காக காத்திருந்தார் கெலாட்
/
கவர்னரை காக்க வைத்த காங்., அரசு மீது பா.ஜ., விளாசல்! உரை நிகழ்த்த முதல்வருக்காக காத்திருந்தார் கெலாட்
கவர்னரை காக்க வைத்த காங்., அரசு மீது பா.ஜ., விளாசல்! உரை நிகழ்த்த முதல்வருக்காக காத்திருந்தார் கெலாட்
கவர்னரை காக்க வைத்த காங்., அரசு மீது பா.ஜ., விளாசல்! உரை நிகழ்த்த முதல்வருக்காக காத்திருந்தார் கெலாட்
ADDED : மார் 04, 2025 04:50 AM

பெங்களூரு: ஆண்டின் முதல் கூட்டத்தில் உரையாற்ற சட்டசபைக்கு வந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், இருக்கையில் முதல்வர் சித்தராமையா இல்லாததால் சிறிது நேரம் அவர் வருகைக்காக காத்திருந்தார். கவர்னரை காக்க வைத்ததாக, காங்கிரஸ் அரசு மீது பா.ஜ., உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சட்டசபைக்குள் தாவர்சந்த் கெலாட் நுழைந்ததும், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து, கை கூப்பி வணங்கியபடி வந்தார்.
வணங்கிக் கொண்டே வந்த கவர்னர் சற்று துாரம் வந்ததும் நின்றுவிட்டார். ஏன் அவர் பாதியிலேயே நின்றுவிட்டார் என்பது புரியாமல் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
முதல்வர் இருக்கை காலியாக இருப்பதை கவர்னர் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த பின்னர் தான் அனைவருக்கும் புரிந்தது, முதல்வர் இன்னும் வரவில்லை என்று.
இதை கவனித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சென்னபசப்பா, குருராஜ் ஆகியோர், 'கவர்னரை அவமானம் செய்தது போதாதா? இன்னும் எத்தனை முறை அவமானம் செய்வீர்கள்? ஏன் இப்படி அவமானம் செய்கிறீர்கள்?' என உரத்த குரலில் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் ராயரெட்டி ஆகியோர், 'உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? அனைத்து விஷயங்களிலுமே அரசியல் செய்வீர்களா?' என்றனர்.
கவர்னர் முன்னிலையிலேயே ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சலசலப்புக்கு மத்தியில் முதல்வர் சித்தராமையா வந்து, கவர்னரை வணங்கினார். பதிலுக்கு வணக்கம் செலுத்திய கவர்னர், அதன் பின்னரே சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்றார். மரபுப்படி சட்டசபை, மேலவை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.
உரை நிகழ்த்திய பின், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி கூறியவாறு, விதான் சவுதாவிலிருந்து புறப்பட்டார்.
இந்த நிகழ்வால் சட்டசபையில் சற்று நேரம் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கர்நாடக சட்டசபை அமர்க்களமாக இருந்தது. இன்று முதல், காரசார விவாதங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.