சிவகுமாரை அவமதித்த ராகுல்? பா.ஜ., அசோக் கடும் கண்டனம்
சிவகுமாரை அவமதித்த ராகுல்? பா.ஜ., அசோக் கடும் கண்டனம்
UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 10:24 PM
பெங்களூரு: டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சிவகுமாரின் சட்டையை பிடித்து தள்ளியதாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்., குளறுபடி மற்றும் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, டில்லியில் காங்கிரஸ் தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதில் கர்நாடக முதல்வர் சிவகுமாரும் பங்கேற்றிருந்தார்.
இந்த போராட்டம் தொடர்பான வீடியோ ஒன்று, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. போராட்டத்தில் சென்று கொண்டிருந்த, முதல்வர் சிவகுமாரின் சட்டையை பிடித்து ராகுல் பின்னுக்கு தள்ளிய காட்சி வீடியோவில் உள்ளது. இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:
முதல்வர் சிவகுமாரின் சட்டை காலரை பிடித்து ராகுல் தள்ளியுள்ளார். இது முதல்வர் சிவகுமாருக்கு நடந்த அவமதிப்பு அல்ல. மாநில மக்களுக்கு நடந்த அவமதிப்பாகும். முதல்வரை இது போன்று நடத்தியிருக்க கூடாது.
எந்த கட்சியின் மேலிட தலைவர்களும் முதல்வர்களை இப்படி நடத்தியது இல்லை. வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக முதல்வருக்கு அவமதிப்பு நடந்துள்ளது.
இது நாம் தலை குனியும்படியான சம்பவம். ராகுலுக்கு கவுரவம் இருந்தால் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் சிவகுமாரை, எதற்காக டில்லிக்கு அழைத்தனர், இப்படி அவமதித்தது ஏன். இதுதான் காங்கிரசின் கலாசாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.
