கரும்பு விவசாயிகள் போராட்டம் மாநிலத்தில் போக்குவரத்து பாதிப்பு
கரும்பு விவசாயிகள் போராட்டம் மாநிலத்தில் போக்குவரத்து பாதிப்பு
UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 10:24 PM

பெங்களூரு: ‘டன் கரும்புக்கு 5,500 ரூபாய் ஆதரவு விலை வழங்க வேண்டும்’ என கோரி, கரும்பு விவசாயிகள், மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மத்திய அரசு, ஒரு டன் கரும்புக்கு 5,500 ரூபாய் ஆதரவு விலையை வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள், பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக, பெலகாவி மாவட்டம் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹட்டர்கி, ஹிரே பாகேவாடி பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் டிராக்டர்கள் உள்ளிட்ட தங்கள் வாகனங்களை விவசாயிகள் சாலையில் நிறுத்தி போராடினர். இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறுகையில், ‘கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தக்கோரி மத்திய அமைச்சர்களுடன் சமீபத்தில் டில்லியில் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. எங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.
இது குறித்து, மத்திய உணவு, பொது வினியோகத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டியவை. இதற்காக, விவசாயிகள் யாரும் சாலை மறியலிலோ, போராட்டத்திலோ ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகள் அமைதி காக்கவும்.
கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்குமாறு முதல்வர் சிவகுமார் என்னிடம் கோரிக்கை வைத்திருந்தார். கரும்பு விவசாயிகளின் பிரச்னைகள் நிச்சயம் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
