நடுரோட்டில் ஏட்டு மீது தாக்கு ம.ஜ.த., மாநில செயலர் கைது
நடுரோட்டில் ஏட்டு மீது தாக்கு ம.ஜ.த., மாநில செயலர் கைது
ADDED : ஆக 18, 2026 02:49 AM

கொட்டிகெரே: நடுரோட்டில் போலீஸ் ஏட்டை தாக்கிய ம.ஜ.த., மாநில செயலர் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கொட்டிகெரே சதுக்கத்தில் போக்குவரத்து போலீஸ் ஏட்டு அருண் மஞ்சப்பா நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ம.ஜ.த., மாநில செயலர் மஞ்சுநாத், 65, தனது காரில் வந்தார்.
அவரது காரை, ஏட்டு அருண் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத் காரிலிருந்து இறங்கி வந்து அருணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் ஏட்டை தாக்கினார்.
வாகன ஓட்டிகளும், போலீசாரும் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, போலீஸ் உயர் அதிகாரிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவங்களை மஞ்சுநாத் விவரித்தார். உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, மஞ்சுநாத்திடம் அருண் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஏட்டை தாக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, ஏட்டு அருண், ஹுலிமாவு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மஞ்சுநாத் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
