சாம்ராஜ்பேட்டை துப்பாக்கி சூடு சம்பவத்தால் சட்டசபையில் அமளி!: ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்
சாம்ராஜ்பேட்டை துப்பாக்கி சூடு சம்பவத்தால் சட்டசபையில் அமளி!: ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்
ADDED : ஆக 18, 2026 02:51 AM

சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில், காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் வேட்டைக்காரர்கள், வனத்துறையினர் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில், மூன்று தமிழர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மழைகால சட்டசபை கூட்டத்தொடர், நேற்று காலை மீண்டும் துவங்கியது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: சாம்ராஜ்நகர் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இது தொடர்பாக முழு தகவல்களை அரசு வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ள இவ்வழக்கு தொடர்பாக, தமிழக முதல்வர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரத்தை மாநில அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது.
துணை முதல்வர் பரமேஸ்வர்: முதலில் கேள்வி - பதில் குறித்து விவாதிக்கலாம். பின்னர், விதிகளின்படி, துப்பாக்கி சூடு குறித்து விரிவான விவாதம் நடத்தலாம்.
பா.ஜ., - சுனில் குமார்: துப்பாக்கி சூடு தொடர்பாக, அரசு தாமாக முன்வந்து அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்த்தோம். எந்த அறிக்கையும் வெளியிடாததால், நாங்களே இப்பிரச்னையை எழுப்பினோம்.
வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி: சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் (14ம் தேதி) இரவு 8:00 மணியளவில், சாக்யா அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் சட்ட விரோதமாக சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தலா 10 பேர் கொண்ட இரு குழுவினர் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.
மறுநாள் அதிகாலை 5:00 மணியளவில், வனப்பகுதியில் 'பிளாஷ் லைட்'டை பார்த்தனர். சந்தேகத்திற்குரிய நபர்களை சரணடையும்படி, வனத்துறையினர் எச்சரித்தனர். அப்போது வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். வனத்துறையினரும் தற்காப்புக்காக திருப்பி சுட்டனர்.
அத்துடன் வேட்டைக்காரர்கள் உயரமான பகுதியில் இருந்ததாலும், தெளிவாக தெரியவில்லை. வேண்டுமென்றே இந்த துப்பாக்கி சூடு நடத்தவில்லை. வேட்டைக்காரர்கள் அலறல் சத்தம் கேட்டு, வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பின், அவர்கள் உடல்கள் மைசூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துப்பாக்கி சூட்டில் வனத்துறை ரோந்து ஊழியர் சிவ்ராஜ் லேசான காயம் அடைந்தனர்.
வேட்டைக்காரர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள், 34.25 கிலோ வன விலங்கு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. இறந்தவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் ஐந்து முதல் எட்டு கி.மீ., துாரம் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அசோக்: நீங்கள் படித்தது எனக்கு புரியவில்லை. இந்த வழக்கு குறித்து மக்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் இருந்தும், ஏன் உடல்களை மைசூருக்கு கொண்டு சென்றனர்.
பெங்களூரு நகர்ப்புற துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா: அமைச்சர் பதிலளித்து விட்டார். தயவு செய்து கேள்வி - பதில் அமர்வுக்கு அனுமதிக்கவும்.
பா.ஜ., சுனில் குமார்: மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணபைரே கவுடா: இறந்தவர்களின் உடல்கள் மீது, அவர்கள் (எதிர்க்கட்சியினர்) அரசியல் செய்கின்றனர். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினர் வேதனையில் இருக்கும்போது, அவர்கள் இங்கு அரசியல் செய்கின்றனர்.
'அப்போது எதிர்க்கட்சியினர், 'என்கவுன்டர் என்பது அரசுக்கு அவமானம்' என்றனர்.
அதற்கு ஆளும் கட்சியினர், 'நீங்கள் உத்தர பிரதேசம், குஜராத்தில் என்கவுன்டர்களை நடத்தி உள்ளீர்கள்' என்று பதிலடி கொடுத்தனர். இதனால் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் யார் என்ன பேசுகின்றனர் என்று புரியாமல் சபையில் அமளி ஏற்பட்டது).
இதனால், சபையை, மதியம் 2:00 மணி வரை சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் ஒத்திவைத்தார்.
மீண்டும் சபை கூடியதும் பேசிய அசோக்: ஹனுார் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வழக்கின் முழு உண்மையையும் வெளிகொணர, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தார்மீக பொறுப்பேற்று, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உடனடியாக பதவி விலக வேண்டும்.
பா.ஜ., - விஜயேந்திரா: தற்காப்புக்காகவே மோதல் நடந்ததாக வனத்துறை அதிகாரிகள் கூறுவது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த வழக்கு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும்.
வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினரா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் ஹனுார் சம்பவம் நடந்துள்ளது. அரசு இதை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்.
என்கவுன்டருக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவரா? அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு என்ன இழப்பீடு வழங்கும்?
அமைச்சர் ராமலிங்க ரெட்டி: வனத்தை பாதுகாப்பது துறையின் கடமை. வன சட்டத்தின் கீழ் ஏற்கனவே, வனத்துறையினர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின், எங்கள் ஊழியர்கள் வேண்டுமென்றே தவறு செய்திருப்பது அல்லது சட்டத்தை மீறியிருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி, கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதற்கிடையில், துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக, ஹனுார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மற்றும் தாலுகா நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன்படி, இறந்தவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் நேற்று நேரில் சென்ற எம்.எல்.ஏ., மஞ்சுநாத், தன் தனிப்பட்ட உதவியாக 10 லட்சம் ரூபாயும்; தாலுகா நிர்வாகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி னார்.
