ADDED : ஆக 18, 2026 02:51 AM

பெங்களூரு: தந்தை, மகன் சந்தேகத்துக்கு இடமாக இறந்து கிடந்தனர். இவர்களை மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவை சேர்ந்தவர் அபிநந்தன், 35. இவர் பெங்களூரின் சிக்க பானவாராவின் குட்டே பசவேஸ்வரா லே - அவுட்டில் வசித்து வந்தார்.
எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இவரது மனைவி ஹரிணி, 26. தம்பதிக்கு யதுவீர், 5, என்ற மகன் இருந்தார்.
தம்பதி, அவ்வப்போது சண்டை போட்டு வந்தனர். இதனால், ஹரிணி வீட்டை விட்டு வெளியேறினார்.
மூன்று மாதங்கள் வேறு எங்கோ வசித்தார். சில நாட்களுக்கு முன், அவர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், அபிநந்தன் தன் மனைவி, மகனுடன் உறவினர் வீட்டுக்கு சென்று வந்தார்.
இரவு, ஏதோ காரணத்துக்காக, தம்பதி இடையே வாக்குவாதம் நடந்தது. அதன்பின் தந்தையும், மகனும் அறைக்கு சென்று உறங்கினர். ஹரிணி வேறு அறையில் படுத்திருந்தார்.
நேற்று காலையில் அறைக்கு சென்று பார்த்த போது, அபிநந்தனும், யதுவீரும் படுக்கையில் இறந்து கிடந்தனர். ஹரிணி, சிக்கபானவாரா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், தந்தை, மகனின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடலில் காயங்கள் காணப்பட்டன.
ஹரிணியே கணவரையும், மகனையும் உணவில் விஷம் கலந்து கொடுத்தோ அல்லது கழுத்தை நெரித்தோ கொலை செய்துள்ளார் என, அபிநந்தனின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து, புகார் அளித்துள்ளனர். போலீசாரும், ஹரிணியிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
தந்தை, மகனின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியும்.
