தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மறு எண்ணிக்கையில் 52 ஓட்டுகளில் பா.ஜ., வெற்றி சிருங்கேரி தொகுதியில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்

 மறு எண்ணிக்கையில் 52 ஓட்டுகளில் பா.ஜ., வெற்றி சிருங்கேரி தொகுதியில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்

 மறு எண்ணிக்கையில் 52 ஓட்டுகளில் பா.ஜ., வெற்றி சிருங்கேரி தொகுதியில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்


ADDED : மே 03, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிருங்கேரி தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கையில், காலையில் காங்., எம்.எல்.ஏ., 2 ஓட்டுகள் கூடுதலாக பெற்றதாக அறிவித்த நிலையில், பா.ஜ.,வின் ஜீவராஜ் 52 ஓட்டுகள் அதிகமாக பெற்றிருப்பதால், பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. சீல் வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷனிடமும், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி சட்டசபை தொகுதியில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசின் ராஜே கவுடா, 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, 1822 தபால் ஓட்டுகளில், 279 ஓட்டுகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

மறு எண்ணிக்கை தபால் ஓடடுகளில் சந்தேகம் எழுப்பிய பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஜீவராஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 2ம் தேதி (நேற்று முன்தினம்) தபால் ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்தும்படி உத்தரவிட்டது. இதை யடுத்து, சிக்கமகளூரு நகரின் ஐ.டி.எஸ்.ஜி., கல்லுாரியில் நேற்று முன்தினம் மறு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

மதியம் வரை நடந்த ஓட்டு எண்ணிக்கையில், 2023 தேர்தலில் 201 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்த ராஜே கவுடா, மறு ஓட்டு எண்ணிக்கையில், 203 என இரண்டு ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.

இதனால் எம்.எல்.ஏ., ராஜே கவுடா வெற்றி பெற்றதாக நினைத்து, காங்கிரஸ் தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதேவேளையில், 'தபால் ஓட்டு எண்ணுவதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக' கூறி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால் ஓட்டுகள் நேற்று அதிகாலை 4:00 மணி வரை எண்ணப்பட்டது.

செல்லாத ஓட்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் அதிகாரி கவுரவ் குமார் ஷெட்டி கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவுப்படி, 1,822 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், 2023ல் பா.ஜ., வேட்பாளர் ஜீவராஜ், 692 ஓட்டுகளும்; காங்கிரஸ் வேட்பாளர் ராஜே கவுடா, 569 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

மறு ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ.,வின் ஜீவராஜ், 690 ஓட்டுகளும்; காங்கிரசின் ராஜே கவுடா, 314 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், 2023ல் ராஜே கவுடாவுக்கு, 569 ஓட்டுகள் கிடைத்தன. மறு எண்ணிக்கையில், 314 ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளன. இதன் மூலம், கடந்த முறையை விட, 255 ஓட்டுகள் குறைந்துள்ளது.

மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் தேர்தல் கமிஷனுக்கும், உயர் நீதிமன்றத்திலும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்க எனக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மறு ஓட்டு எண்ணிக்கை வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பா.ஜ.,வின் ஜீவராஜ், 52 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, அவரது ஆதரவாளர்கள் நடனமாடி கொண்டாடினர்.

புகார் இதற்கிடையில், சிக்கமகளூரு நகர போலீஸ் நிலையத்தில், காங்கிரசின் சுதிர் குமார் முரளி புகார் அளித்து உள்ளார். அதில், 'தபால் ஓட்டு பெட்டிகள் இருந்த பாதுகாப்பு அறையின் தாழ்ப்பாள் சீல் வைக்கப்படவில்லை.

தபால் ஓட்டுகள் இருந்த பெட்டிகள் திறந்திருந்தன. பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதற்கு காரணமான தேர்தல் அதிகாரிகள், பா.ஜ.,வின் ஜீவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.

எம்.எல்.ஏ., ராஜேகவுடா கூறியதாவது:

ஓட்டு எண்ணிக்கை நாளன்று, பாதுகாப்பு அறை திறந்தபோது, தபால் ஓட்டு பெட்டிகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன, சில பெட்டிகளில் சீல் எடுக்கப்பட்டிருந்தன. எனவே, ஓட்டுகளில் முறைகேடு நடந்துள்ளது.

எங்களுக்கு அளிக்கப்பட்ட தபால் ஓட்டுகளில், வேறு வித 'மை' பயன்படுத்தி, வேண்டுமென்றே செல்லாத ஓட்டுகளாக மாற்றி உள்ளனர்.

கடந்த முறை கிடைத்த ஓட்டுகள்; மறு எண்ணிக்கையின் போது செல்லாது என்று மாறியதற்கு, ஜீவராஜும், அவரது ஆதரவாளர்களுமே காரணம். ஓட்டுகள் மோசடியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வின் ஜீவராஜ் கூறுகையில், ''கடந்த மூன்று ஆண்டு போராட்டத்தில், எனக்கு நீதி கிடைத்துள்ளது. மறு ஓட்டு எண்ணிக்கையின் போது, காங்கிரஸ் வேட்பாளரின் ஓட்டுகள் கணிசமாக குறைந்து உள்ளது.

''தேர்தல் அதிகாரியிடம் இருந்து எனக்கு உடனடியாக சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும், நாங்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம். தேர்தலில் தோற்ற கோபத்தில், தேவையின்ற எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்,'' என்றார்.

.... புல் அவுட் ...

சிருங்கேரி மறு எண்ணிக்கை முடிவுகளை நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ., ஜீவராஜ், அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக ராஜே கவுடாவும், காங்கிரசாரும் புகார் அளித்து உள்ளனர். இவ்விவகாரத்தில் அனைத்த அரசியல் கட்சியினரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் முறையிடுவோம். இதேபோன்று தான் பெங்களூரு ஜெயநகர் சட்டசபை தொகுதியிலும் நடந்துள்ளது.

- சிவகுமார்,

துணை முதல்வர்

*

... புல் அவுட் ...

தர்ம பூமியான சிருங்கேரியில், உண்மை ஜெயித்துவிட்டது. ஜீவராஜின் இந்த வெற்றி, நம் தேர்தல் நடைமுறை மீதும், நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நேரத்தில் சிருங்கேரியின் அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடர் முயற்சி, அயராத போராட்டத்துக்கு கிடைத்த பலன்.

- விஜயேந்திரா,

தலைவர், மாநில பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us