லிங்காயத், ஓ.பி.சி., ஓட்டுகளை கவர பா.ஜ., அதிரடி வியூகம்
லிங்காயத், ஓ.பி.சி., ஓட்டுகளை கவர பா.ஜ., அதிரடி வியூகம்
ADDED : ஜூன் 10, 2026 01:23 AM
- நமது நிருபர் - கர்நாடகாவில் சட்டசபை, லோக்சபா தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என தீர்மானிப்பதில், ஜாதி ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூகங்களின் மடாதிபதிகள் யாருக்கு ஓட்டு போட சொல்கின்றனரோ, அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுகின்றனர்.
கர்நாடகாவின் வடமாவட்டங்களில் லிங்காயத் சமூகத்தினர் பெருமளவில் வசிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அச்சமூகம் தேர்தலில் பா.ஜ.,வை ஆதரித்து வந்தது.
இடஒதுக்கீடு இந்நிலையில், லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க, முந்தைய பா.ஜ., அரசு மறுத்ததால், கடந்த 2023 தேர்தலில் பா.ஜ.,வை லிங்காயத் சமூகம் கைவிட்டது. காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க பழைய மைசூரு பகுதி ஒரு காலத்தில் ம.ஜ.த., கோட்டையாக இருந்தது. தற்போது மெல்ல, மெல்ல காங்கிரசின் கட்டுப்பாட்டில் வர ஆரம்பித்துள்ளது. மத்திய கர்நாடகா பகுதியிலும் பா.ஜ.,வை காட்டிலும், காங்கிரசுக்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது.
கடந்த 2023ல் கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்த பின், ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அனைத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதிலும் சென்னப்பட்டணா, ஷிகாவி, தாவணகெரே தெற்கு தொகுதிகளில், ஓ.பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஓட்டுகளை ஒருங்கிணைத்து காங்கிரசால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. இதனால் ஓ.பி.சி., ஓட்டுகளை கவர, பா.ஜ.,வும் அதிரடி வியூகம் வகுத்துள்ளது.
இரண்டு மாங்காய் கர்நாடக மேல்சபையில் காலியாகும் ஏழு இடங்களில், பா.ஜ.,வால் இரு இடங்களில் வெற்றி பெற முடியும். இரண்டு இடங்களுக்கும் லிங்காயத் சமூகத்தின் லிங்கராஜ் பாட்டீல், ஓ.பி.சி., சமூகத்தின் ரகு கவுதில்யா களம் இறக்கப்பட்டுள்ளனர். இதுபோல ராஜ்யசபா தேர்தலிலும் ஓ.பி.சி., சமூகத்தின் நாகராஜுக்கு பா.ஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் வகையில், லிங்காயத், ஓ.பி.சி., சமூக ஓட்டுகளை கவர பா.ஜ., வியூகம் வகுத்துள்ளது.
சித்தராமையாவுக்கு பின், அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் நான் தான் என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூக ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அவருக்கு செக் வைக்க, பா.ஜ.,வும் ஓ.பி.சி., சமூகத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதன்மூலம் 2028 தேர்தலில் ஓட்டுகளை கவரலாம் என்றும் பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
