ADDED : ஜூன் 10, 2026 01:23 AM
- நமது நிருபர் -
குருபர் சமூகத்தில் இருந்து இரண்டு முறை முதல்வரான சித்தராமையாவை அடுத்து, தங்கள் சமூகத்திற்கான அடுத்த தலைவரை தேர்வு செய்ய தயாராகி வருகின்றனர்.
கர்நாடகாவில் குருபர் சமூகத்தினர் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்களில் இருந்து வந்தவர் சித்தராமையா. எட்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து, முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சின் சாதனையை முறியடித்தவர்.
'அஹிந்தா' அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஓட்டுகளை ஒன்றாக்கினார். இதன் மூலம் அவர்களின் ஆதர்ஷ தலைவராகவும் இருக்கிறார்.
விலகிய சித்தராமையா இந்நிலையில், கட்சி மேலிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். இதன் மூலம், 'சித்தராமையாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக' குருபர் சமூக தலைவர்கள் கூறுகின்றனர். குருபர் தலைவர்களுக்கு காங்கிரஸ் உரிய அதிகாரம் அளிக்கவில்லை; ஒட்டுமொத்த மாநிலத்திலும் செல்வாக்கு செலுத்த கூடிய, இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதற்கான நேரம் இது என்றும் இச்சமூகத்தை சேர்ந்த சில தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
'முன்னாள் அமைச்சரும், ஹாவேரி எம்.எல்.ஏ.,வுமான பசவராஜ் சின்னவருக்கு துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவி, ஹொசதுர்கா எம்.எல்.ஏ., கோவிந்தப்பா, கொப்பால் எம்.எல்.ஏ., ராகவேந்திரா ஹிட்னால் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
கர்நாடகாவின் வட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்' என இவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மிகவும் பின்தங்கிய சமூகமாக கருதப்படும் குருபர் சமூகம், கர்நாடகாவில் உள்ள பின்தங்கிய ஜாதிகள் இடையே முக்கிய சக்தியாக கருதப்படுகிறது.
கூடுதல் இடங்கள் ஹெப்பால் எம்.எல்.ஏ., பைரதி சுரேஷ், அமைச்சராகி உள்ள சித்தராமையா மகன் யதீந்திரா போன்றோர் செல்வாக்கு பெற்றிருந்தாலும், குருபர் சமுகத்தின் உறுப்பினர்கள் பலரும், அவர்களை, தங்கள் சமூக மக்களின் பிரதிநிதிகளாக கருதவில்லை.
முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் அடகுரு விஸ்வநாத்தும், 'மாநில அரசில் குருபர் சமுதாயத்தை சேர்ந்தவர் உயர் பொறுப்பில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
சித்தராமையாவின் செல்வாக்கை கொண்டு, குருபர் சமுகத்தினர் மற்றொரு தலைவரை உருவாக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்' என்று தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஒன்றான குருபர் சமுகத்தினர், 'தங்களின் மக்கள் தொகை, அரசியல் பலத்துக்கு ஏற்ப, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாக இடங்களில் குறிப்பிட்ட பங்கு வகிக்கும் தகுதி பெற்றவர்கள்' என்று நம்புகின்றனர்.
அதுபோன்று, தனது சமுகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்க வேண்டும்' என்று கட்சி மேலிடத்திடம் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
