/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் சித்தராமையாவால் மட்டுமே வளர்ச்சி பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் 'ஐஸ்'
/
முதல்வர் சித்தராமையாவால் மட்டுமே வளர்ச்சி பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் 'ஐஸ்'
முதல்வர் சித்தராமையாவால் மட்டுமே வளர்ச்சி பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் 'ஐஸ்'
முதல்வர் சித்தராமையாவால் மட்டுமே வளர்ச்சி பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் 'ஐஸ்'
ADDED : பிப் 05, 2025 06:43 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையா ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் குருபர் சமூகம் வளர்ச்சி அடையும்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் கூறினார்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தண்டுபாளையாவில் நடந்த கனகதாசர் ஜெயந்தியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
சித்தராமையா ஆட்சிக் காலத்தில் மட்டுமே குருபர் சமூகம் வளர்ச்சி அடையும். இல்லையென்றால் இந்த சமூகத்தின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. அவரது தலைமையின் கீழ் சமூகத்தை வளர்க்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நான் மூன்று முறை ஹொஸ்கோட் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி உள்ளேன். அப்போது குருபர் சமூகத்திற்கு நான் பட்ட நன்றிக் கடனை அடைத்துள்ளேன். அனைத்து சமூகத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.
தற்போது எம்.எல்.ஏ., வாக இருப்பவர், அவரது தந்தை, தங்கள் சமூகத்திற்காக என்ன செய்தனர் என்பதை தெரியப்படுத்த வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் அனைத்து சமூகத்திற்காக உழைக்கிறேன்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஹொஸ்கோட்டில் மருத்துவ கல்லுாரி, இன்ஜினியரிங் கல்லுாரி நிறுவுவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் தற்போது அந்தப் பணிகள் நடக்கவே இல்லை. இதற்கு முதல்வர் பொறுப்பு இல்லை. யார் காரணம் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகராஜ் முன்பு காங்கிரசில் இருந்தவர். முதல்வரின் ஆதரவாளராகவும் செயல்பட்டார். ஆனால் கூட்டணி ஆட்சிக்கு எதிராக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த 17 பேரில் இவரும் ஒருவர்.
பா.ஜ., ஆட்சியில் நகராட்சி நிர்வாக அமைச்சராக பணியாற்றினார். கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். அவருக்கு எம்.எல்.சி., பதவி கிடைத்தது. ஆனாலும், கட்சியின் சில தலைவர்கள் தன்னை சரியாக நடத்தவில்லை என, நாகராஜ் அதிருப்தியில் இருக்கிறார்.
தற்போது முதல்வரை பாராட்டி பேசி, 'ஐஸ்' வைத்திருப்பதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் பக்கம் தாவ நினைக்கிறாரா என்று பேச்சு அடிபடுகிறது.