தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்டம் செல்லுபடியாகாது: ஹரி பிரசாத்
தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்டம் செல்லுபடியாகாது: ஹரி பிரசாத்
ADDED : மே 06, 2026 04:06 AM

பெங்களூரு: ''ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, தென் மாநிலங்களில் பா.ஜ., தன் வாலை ஆட்ட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது,'' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் கூறியதாவது:
ஐந்து மாநில தேர்தல்கள் முடிவுகளை பார்க்கும் போது, தென் மாநிலத்தில் பா.ஜ., தன் வாலை ஆட்ட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கம், ஆசாமில் அரசு இயந்திரங்களையும், அரசியல் அமைப்பு பதவிகளையும் பா.ஜ., தவறாக பயன்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் போலீஸ், ராணுவத்தை பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர்., மூலம் 93 லட்சம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
இதில், எங்கள் வேட்பாளர்களின் பெயர்களும், வாக்காளர் பெயர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு வாக்குகள் நீக்கப்பட்டால், ஜனநாயகம் எப்படி நிலைத்திருக்கும்? நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். அதை காங்கிரசால் மட்டுமே செய்ய முடியும்.
தமிழக மக்கள் பக்குவமானவர்கள். அங்கு மதவாதமும், இந்தி திணிப்பும் நடக்காது என்ற சரியான பாடத்தை கற்பித்து உள்ளனர். நடிகர் விஜயின் டி.வி.கே., கட்சி 35 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 'ஜென் ஜி' வாக்காளர்களின் பெருமளவில் ஆதரவளித்து உள்ளது தெரிகிறது. இதை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.
புதுச்சேரியில் ரங்கசாமியின் செல்வாக்கால் வெற்றி பெற்றுள்ளதே தவிர, பா.ஜ.,வால் அல்ல. ரங்கசாமியை கவர்ச்சியை பயன்படுத்தி, தங்களின் வெற்றி என பா.ஜ., உரிமை கோருவது நகைச்சுவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
