/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை பள்ளங்களை மூடி பா.ஜ., நுாதன போராட்டம்
/
சாலை பள்ளங்களை மூடி பா.ஜ., நுாதன போராட்டம்
ADDED : செப் 24, 2025 11:15 PM

பெங்களூரு: பெங்களூரில் சாலைப் பள்ளங்களை மூடி, அரசுக்கு எதிராக, பா.ஜ.,வினர் நேற்று நுாதன போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு நகரில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எந்த சாலையை பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலைப் பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
நகரின் மோசமான சாலைகள், தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. சாலைப் பள்ளம், போக்குவரத்து நெரிசல் விஷயத்தில் காங்கிரஸ் அரசை, ஐ.டி., நிறுவனங்கள், தொழிலதிபர்கள் சாடினர்.
சாலைப் பள்ளம் விஷயத்தில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என, பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பெங்களூரில் நேற்று பா.ஜ.,வினர் நுாதன போராட்டம் நடத்தினர். சாலைப் பள்ளம் விழுந்துள்ள இடங்களில், சிமென்ட், ஜல்லிக்கற்களை கொட்டி பள்ளத்தை மூடினர்.
பனசங்கரி 3வது ஸ்டேஜ் பகுதியில் நடந்த போராட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பங்கேற்றார். பள்ளம் விழுந்த சாலைகளில் சிமென்ட், ஜல்லிக்கற்களை கொட்டினார். மண்வெட்டியால் சமன்படுத்தி பள்ளத்தை மூடினார்.
சிக்பேட் தொகுதிக்கு உட்பட்ட பி.வி.கே., ஐயங்கார் சாலையில் பள்ளங்களை, பெங்களூரு சென்ட்ரல் எம்.பி., மோகன், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா உள்ளிட்டோர் மூடினர்.
மஹாலட்சுமி லே - அவுட்டில், பெங்களூரு வடக்கு மண்டல பா.ஜ., தலைவர் ஹரிஷ்; எலஹங்காவில் எம்.எல்.ஏ., விஸ்வநாத் தலைமையிலும், சாலைப் பள்ளங்களை மூடும் போராட்டம் நடந்தது.
எம்.பி., தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையில் ஜெயநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தவிர பெங்களூரு நகர் முழுதும் சாலைப் பள்ளங்களை மூடி பா.ஜ.,வினர் நுாதன போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், துணை முதல்வர் சிவகுமார் பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.