/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
களையிழந்த அமைச்சர்கள் முகம் பா.ஜ., சுனில்குமார் கிண்டல்
/
களையிழந்த அமைச்சர்கள் முகம் பா.ஜ., சுனில்குமார் கிண்டல்
களையிழந்த அமைச்சர்கள் முகம் பா.ஜ., சுனில்குமார் கிண்டல்
களையிழந்த அமைச்சர்கள் முகம் பா.ஜ., சுனில்குமார் கிண்டல்
ADDED : மே 20, 2025 12:49 AM

பெங்களூரு,: 'விஜயநகராவின் ஹொஸ்பேட்டில் சாதனை மாநாடு நடத்த முற்பட்டுள்ள அமைச்சர்களின் முகத்தில் களையே இல்லை. பதவி பறிபோகும் என்ற பீதி மட்டுமே தென்படுகிறது,' என பா.ஜ., - எம்.எல்.ஏ. சுனில்குமார் தெரிவித்தார்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் அமைச்சர்களின் முகத்தில் களை இல்லை. சாதனை மாநாட்டின் மகிழ்ச்சி தெரியவில்லை. பதவியை விட்டு கொடுக்க வேண்டிய நாள் நெருங்குகிறதே என்ற பயமும், சோகமும் தென்படுகிறது. மாநாடு முடிந்த கையோடு, காங்கிரசில் பதவிக்காக கடுமையான மோதல் வெடிக்கும்.
மக்கள் கோபம்
இரண்டு ஆண்டுகளில், மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தண்டமான அரசு, சாதனை மாநாடு நடத்துவது, மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் நிதியுதவி வழங்காமல், மாநில முன்னேற்றத்தை 10 ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு சென்றதற்காகவா; அரசு சேவைகளின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதற்காகவா; மத்திய அரசின் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தியதற்காகவா?
ஜாதி, மதம், மொழி அடிப்படையில் துண்டு போடுவதற்காகவா; ஹிந்து தொண்டர்கள் ரத்தம் சிந்துவதற்காகவா; விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என, கோஷம் போட்டவரை, ராஜ்யசபா உறுப்பினராக்கியதற்காகவா; ஜாதி வாரி கணக்கு எடுப்பு பெயரில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையை குலைத்ததற்காகவா; லோக் ஆயுக்தா உட்பட மற்ற விசாரணை அமைப்புகளை பலவீனமாக்கியதற்காகவா?
100 சதவீத ஊழல்
பெங்களூரின் அடிப்படை வசதிகளை, சுரங்கப்பாதையில் சமாதி செய்ததற்காகவா; ஊழலை 100 சதவீதமாக அதிகரித்ததற்காகவா; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பணத்தை தவறாக பயன்படுத்தியதற்காகவா; அரசியலமைப்புக்கு எதிராக, அரசு பணிகளின் ஒப்பந்தத்தில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவா சாதனை மாநாடு நடத்துகின்றனர்.
'முடா' விவாதத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா பெங்களூரை விட்டு விட்டு, வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய அஞ்சுகிறார். பெங்களூரு, மைசூரில் மட்டுமே, அரசு செயல்படுகிறது. வளர்ச்சி பூஜ்யம்.
மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, சாதனை மாநாடு நடத்த வேண்டுமா. இப்படிப்பட்ட மோசமான ஆட்சியை, உங்கள் கட்சியின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆதரிக்கின்றனரா. பெங்களூரின் அடிப்படை வசதிகளுக்கு, இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு நிதி வழங்கினீர்கள் என, வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்.
ரோம் பற்றி எரியும் போது, யாரோ ஒருவர் 'பிடில்' வாசித்தாராம். பெங்களூரு மழையால் மூழ்கும் போது, காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு நடத்துகிறது. 'கிரேட்டர் பெங்களூரு' இப்போது 'வாட்டர் பெங்களூரு' ஆகியுள்ளது.
இவ்வாறு கூறினார்.