/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கருப்பு கோதுமை விளைச்சல் விஜயபுரா சாந்தவ்வா சாதனை
/
கருப்பு கோதுமை விளைச்சல் விஜயபுரா சாந்தவ்வா சாதனை
ADDED : செப் 07, 2025 10:45 PM

கோதுமை, பொதுவாக வெளிர் பழுப்பு நிறத்தில் இருப்பதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் ஊதா, கருப்பு, மஞ்சள், நீல நிறத்திலும் கோதுமை வகைகள் உள்ளன. இதில் கருப்பு நிறத்தில் இருக்கும் கோதுமை, சாதாரண கோதுமையை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த தானியமாக உள்ளது. கருப்பு கோதுமையை உணவில் எடுத்து கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், செரிமான பிரச்னையை தீர்க்கிறது.
கருப்பு கோதுமை விளைச்சலில், கர்நாடகாவின் வடமாவட்டமான விஜயபுராவின் பெண் ஒருவர் சாதனை படைத்து உள்ளார். அவரது பெயர் சாந்தவ்வா, 36. வறட்சி அதிகம் நிலவும் மாவட்டத்தில் வசித்து, கருப்பு கோதுமை விளைச்சலில் சாதித்தது எப்படி என்று அவர் கூறியதாவது:
எனது சொந்த ஊர் விஜயபுராவின் கோல்ஹாரா. எனது கணவர் ரமேஷ் பால்கொண்டா. விவசாயம் செய்கிறார். எங்கள் விவசாய நிலத்தில் சோளம், கம்பு பயிரிட்டு வளர்த்தோம்.
கருப்பு கோதுமையில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பது பற்றி, ஒரு முறை கணவர் என்னிடம் கூறினார். நமது நிலத்தில் ஏன் கருப்பு கோதுமையை பயிரிட கூடாது என்று அவரிடம் கேட்டேன். எனது யோசனைக்கு ஆதரவு தெரிவித்த அவர், மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று கருப்பு கோதுமை விதைகளை வாங்கி வந்தார்; விளைவிக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் கருப்பு கோதுமை விதைகளை விதைத்து வளர்த்து வருகிறேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோதுமை அறுவடை செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு 800 கிலோ வரை கருப்பு கோதுமை கிடைக்கிறது. ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை, சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. என்னை ஆதரித்த கணவர், குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு உள்ளேன். கணவரின் ஆதரவு கிடைத்தால், அனைத்து பெண்களும் பல துறைகளில் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -