ADDED : மே 13, 2026 11:35 PM
பெங்களூரு: வெடிகுண்டு வைத்துள்ளதாக, பொய்யான மிரட்டல் வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது தொடர்பாக, 468 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில், மர்ம நபர்களிடம் இருந்து பொய்யான வெடிகுண்டு மிரட்டல் வருவது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது போலீசாருக்கு, தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதுடன், மக்களையும் பாதிக்கிறது.
மன நோய், தனிப்பட்ட பிரச்னை, மன அழுத்தம், மற்றவர் மீதுள்ள கோபம் உட்பட, பல காரணங்களால் மர்ம நபர்கள், போனில் அழைப்பு விடுத்தோ, மின்னஞ்சல் வழியாகவோ வெடிகுண்டு மிரட்டல் விடுக்கின்றனர்.
பள்ளி, கல்லுாரிகள், விமான நிலையம், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், கோவில்கள், ரயில் நிலையங்கள் என, பொது இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பொய்யான மிரட்டல் விடுக்கின்றனர்.
மிரட்டல் வந்தவுடன், போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் அங்கு சென்று சோதனை நடத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்த வெடி பொருட்களும் கிடைத்தது இல்லை.
தீய குணம் உள்ளவர்கள், இத்தகைய செயல்களை செய்கின்றனர். இது தொடர்பாக, கடந்த ஆறு ஆண்டுகளில் 468 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஐ.பி., முகவரியை மறைக்கும், 'வெர்சுவல் பிரைவேட் நெட்- ஒர்க்' பயன்படுத்தி, பல்வேறு செயலிகள் மூலமாக, போலியான வெடிகுண்டு மிரட்டல் அனுப்புகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியில் அந்த நபர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. வெவ்வேறு நாடுகளின் சர்வர்கள் மூலமாகவும், வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.
அந்தந்த நாடுகளின் இ - மெயில் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியும், அந்நிறுவனங்கள் பொருட்படுத்தாததால், விசாரணைக்கு பின்னடைவு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
