/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உயர் நீதிமன்ற கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
உயர் நீதிமன்ற கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : பிப் 17, 2026 05:42 AM

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற தார்வாட் கிளைக்கு மட்டுமின்றி, பல மாவட்ட நீதிமன்றங்களுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கர்நாடகா மாநில உயர்நீதிமன்ற தார்வாட் கிளை அலுவலகத்துக்கு நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், 'நீதிமன்றத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1:15 மணிக்கு வெடித்து சிதறும்' என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், கரகா போலீஸ் நிலையத்துக்கும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த அவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.
தார்வாட் வக்கீல்கள் சங்க தலைவர் ஹிமேரத் கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக, தார்வாட் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். அவர்களும் பாதுகாப்பை பலப்படுத்த உறுதி அளித்து உள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுப்ப வேண்டும். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை தீவிரமாக கவனத்தில் கொண்டு, குற்றவாளியை, 15 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடரிலும் விவாதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கும், அதன் கிளை நீதிமன்றங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோன்று ஹாவேரி, குடகு, தாவணகெரே, மாண்டியா மாவட்ட நீதிமன்றங்களுக்கும், பேக்ஸ், மின்னஞ்சல் வழியாக மிரட்டல் வந்தது. பல மணி நேர சோதனைக்கு பின், இது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். இதனால், பல மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மதியத்துக்கு பின், வழக்கம் போல் நீதிமன்றங்கள் செயல்பட துவங்கின.
மிரட்டல் வந்த மின்னஞ்சல், பேக்ஸ் தொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

