ADDED : ஜூலை 03, 2026 04:39 AM

பெங்களூரு: பெங்களூரின் 'இஸ்ரோ' மத்திய அலுவலகம் உட்பட, மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பெங்களூரின், சஞ்சய் நகரில் உள்ள 'இஸ்ரோ' அலுவலகத்துக்கு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மின்னஞ்சல் வழியாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மதியம், 1:00 மணிக்கு இஸ்ரோ அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டலை கவனித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த சஞ்சய்நகர் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இஸ்ரோ அலுவலகத்தின் அதிகாரிகள், ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு, அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
எங்கும் வெடிபொருள் தென்படவில்லை. பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாகல்கோட் மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு, நேற்று அதிகாலை, 1.48 மணிக்கு 'பவளமல்லி' என்ற பெயரில், மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று மதியம் 1:00 மணி முதல், 3:00 மணிக்குள், நீதிமன்றத்தில் விஷவாயு மற்றும் ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும். மதியம் 12:00 மணிக்குள், நீதிபதிகள், பொதுமக்களை வெளியேற்றுங்கள் என, மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து, நீதிபதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். இது வெற்று மிரட்டல்.
அதே போல, சாம்ராஜ்நகர், யாத்கிர் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
