சிறுபான்மையினர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச சீருடை
சிறுபான்மையினர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச சீருடை
ADDED : ஜூலை 03, 2026 04:39 AM
பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிவகுமார் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளை கேட்க, 'மக்கள் சேவை துறை' என்ற புதிய துறையை உருவாக்கி உள்ளோம். அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று, மக்களை சந்திக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மின்சார நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும், எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்த பின், சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதற்கு தேதி குறிக்கவும் முடிவு செய்து உள்ளோம்.
பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுவனங்களுக்கு தொழில்நுட்பரீதியாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்போம். புதிய உலகளாவிய முதலீடு, வெளி விவகாரங்கள் துறை உருவாக்க முடிவு செய்து உள்ளோம்.
சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு உறைவிடப் பள்ளிகள், கல்லுாரிகளின் மாணவர்களுக்கான சீருடைகள், விளையாட்டு உடைகள், காலணிகள் மற்றும் மவுலானா ஆசாத் மாதிரி பள்ளி களின் மாணவர் களுக்கான சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை 33.06 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள் வழங்குவோம்.
தேவனஹள்ளி அருகே விண்வெளி பூங்கா அமைப்பதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்க அனுமதி கொடுத்து உள்ளோம். இன்னும் சில திட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
