'தினமலர் நுாலக புத்தகங்களை பார்த்ததும் அலுப்பு பறந்து போனதே'
'தினமலர் நுாலக புத்தகங்களை பார்த்ததும் அலுப்பு பறந்து போனதே'
ADDED : ஏப் 26, 2026 11:54 PM

பெங்களூரு: ''புத்தகங்கள் வாசிக்க உடல் பிரச்னையை தடையாக நினைக்க கூடாது,'' என்று, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்த, தினமலர் வாசகர் சுப்பிரமணியன் கூறினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையின், தினமலர் அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, வித்யாரண்யபுராவில் வசிக்கும் சுப்பிரமணியன், 75, நேற்று வந்தார். 'அந்துமணி பதில்கள்' புத்தகத்தை ஆர்வமாக படித்தார்.
பின், அவர் கூறியதாவது:
எனது சொந்த ஊர் கோயம்புத்துார். பெங்களூரு வந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டன. தினமலர் நாளிதழின் 40 ஆண்டு கால வாசகர் நான். தகவல்களை அள்ளி கொடுக்கும் புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். தினமலர் நாளிதழில் வரும் 'டீக்கடை பெஞ்ச்' எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நுாலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய புத்தகங்கள் உள்ளன. 20 கி.மீ., துாரம் பயணித்து பஸ்சில் வந்தாலும், நுாலக புத்தகங்களை பார்த்ததும் அலுப்பு பறந்து விட்டது. பத்திரிகை அலுவலகத்தில் நுாலகம் ஆரம்பித்தது நல்ல முயற்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. வலது கை, கால் வேலை செய்யாமல் போனது. தொடர்ந்து பிசியோதெரபி செய்த பின், கால் பழைய நிலைக்கு திரும்பி விட்டது. கையும் சரியாக வருகிறது. உடல்நிலை குறைபாடு இருந்த போதிலும், தினமலர் நாளிதழ் வாசிப்பதை ஒரு நாளும் தவிர்க்கவில்லை. நாளிதழ், புத்தகங்கள் வாசிப்பதற்கு, நமது உடல் குறைபாட்டை தடையாக நினைக்க கூடாது என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
