பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிய பரிந்துரை
பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிய பரிந்துரை
ADDED : மே 20, 2026 10:49 PM
சிவாஜி நகர்: பவுரிங் மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து, ஏழு பேர் பலியான வழக்கில், மருத்துவமனையில் கட்டுமான பணியை மேற்கொள்ளும், தனியார் நிறுவனம் மீது கிரிமினல் வழக்குப்பதிய, விசாரணை குழு, அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.
பெங்களூரில் கடந்த மாதம் 29ம் தேதி பெய்த கனமழையால், சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில், சுவரை ஒட்டி உள்ள நடைபாதையில் நின்று கொண்டு இருந்த சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
விசாரணை இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணை குழுவை அரசு அமைத்தது. லோக் ஆயுக்தாவும் தாங்களாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணை குழு, அரசின் தலைமை செயலர் ஷாலினியிடம், விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவமனையில் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் ஏ.எஸ்.ஆர்., டிரேடர்ஸ் நிறுவனத்தின் அலட்சியம் உள்ளது.
இடிந்து விழுந்த சுவர் பகுதியில் கட்டுமான கழிவுகள், மண்ணை குவித்து வைத்திருந்ததால், அழுத்தம் தாங்க முடியாமல் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.
அலட்சியம் மழை நீர் சீராக செல்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் ஏ.எஸ்.ஆர்., டிரேடர்ஸ் நிறுவனம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதுடன், பணியில் அலட்சியமாக இருந்த சுகாதார துறை இன்ஜினியர்கள் சோமராஜ், மகேஷ்குமார், திம்மப்பா, உதய சங்கர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய சுவரை இடித்து அகற்றி விட்டு, 200 மீட்டர் நீளத்திற்கு புதிய சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
