ADDED : ஏப் 19, 2025 05:29 AM
ஷிவமொக்கா: தத்தராஜபுரா கிராமத்தின் ஒரே வீட்டில் இருவருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டது. எட்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின், தத்தராஜபுரா கிராமத்தில் வசிப்பவர் ரம்யா, 10. இவருக்கு கடந்த 4ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பெற்றோர் தீர்த்தஹள்ளியில் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், சிறுமிக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மறுநாள் அவரது தம்பி ரஜித், 8, உடற்சோர்வு, வாந்தியால் அவதிப்பட்டார். அவரையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கும் குரங்கு காய்ச்சல் இருப்பது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
தீவிர சிகிச்சைக்காக, மணிப்பாலின், கே.எம்.சி., மருத்துவமனைக்கு அக்காவும், தம்பியும் மாற்றப்பட்டனர். இருவருக்கும் ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரம்யாவின் உடல் நிலை தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜித்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
சிறுவன் இறப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஷிவமொக்கா மாவட்ட கலெக்டர் குருதத் ஹெக்டே உத்தரவிட்டுள்ளார்.

