/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்கிரீம் ஆசையால் சிறுவன் கடத்தல் நாடகம்
/
ஐஸ்கிரீம் ஆசையால் சிறுவன் கடத்தல் நாடகம்
ADDED : செப் 04, 2025 11:16 PM
சாம்ராஜ்நகர்:ஐஸ்கிரீம், கோபி மஞ்சூரியன் ஆசையால் டியூஷனுக்கு மட்டம் போட்டுவிட்டு, கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு சிறுவனின் செயலால், பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சாம்ராஜ்நகரில் வசிக்கும் 10 வயது சிறுவன், பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி முடிந்து, டியூஷனுக்கு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்றதும், பெற்றோரிடம், 'நான் பள்ளி முடிந்து டியூஷனுக்கு வீட்டுக்கு திரும்பும்போது, யாரோ என்னை கடத்திச் சென்றனர். காரில் சுற்றினர். கோபி மஞ்சூரியன், ஐஸ்கிரீம் சாப்பிடும்படி என்னை பலவந்தப்படுத்தினர். இதனால் நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். அதன்பின் கே.இ.பி., அலுவலகம் முன் பகுதியில் என்னை காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றனர்' என, சிறுவன் கூறினான்.
இதனால் பீதியடைந்த பெற்றோர், உடனடியாக சாம்ராஜ்நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தனர். தகவலறிந்த எஸ்.பி., கவிதாவும் விரைந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
போலீசாரும் சிறுவன் குறிப்பிட்ட ஐஸ்கிரீம், கோபி மஞ்சூரியன் கடை, கே.இ.பி., அலுவலக பின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்தனர்.
சிறுவனை கடத்தியதற்காக எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. சிறுவன் மட்டும் தனியாக கடைக்கு நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால் சிறுவனிடம் போலீசார் தனியாக விசாரித்தனர்.
'என்னை யாரும் கடத்தவில்லை. நான் டியூஷனுக்கு செல்லாமல், கோபி மஞ்சூரியன், ஐஸ்கிரீம் சாப்பிட கடைக்கு சென்றேன். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்தார். பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவர் என்ற பயத்தால், கடத்தியதாக நாடகமாடினேன்' என, சிறுவன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐஸ்கிரீம், கோபி மஞ்சூரியன் சாப்பிடும் ஆசைக்காக, கடத்தல் நாடகமாடி அலைக்கழித்த சிறுவனின் செயலால், பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.