மலை மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்குதலில் சிறுவன் பலி
மலை மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்குதலில் சிறுவன் பலி
ADDED : மே 11, 2026 02:34 AM
சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா மலையில், பாத யாத்திரை சென்ற சிறுவனை, சிறுத்தை இழுத்து சென்று கொன்றதால், பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் அமைந்துள்ள மலை மஹாதேஸ்வரா மலை, பிரசித்தி பெற்ற புண்ணிய தலம். பக்தர்கள், பாத யாத்திரையாக வந்து, மலை மஹாதேஸ்வரரை தரிசிப்பது வழக்கம். இப்பகுதியில் நடமாடும் சிறுத்தைகளால், பக்தர்கள் பாதிப்படைகின்றனர்.
தடை விதிப்பு
நடப்பாண்டு சிவராத்திரி மஹோற்சவத்தின் போது, பாத யாத்திரையாக மலைக்கு சென்று கொண்டிருந்த பிரவீன் என்ற இளைஞரை, சிறுத்தை வனத்துக்கு இழுத்து சென்று கொன்றது.
அவரது உடலை வனத்துறையினர் கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பின், சில நாட்கள் பாத யாத்திரை செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
அதன் பின், போலீஸ் பாதுகாப்புடன் பாத யாத்திரைக்கு செல்ல அனுமதி அளித்தது. மலையேற்ற பாதையில் ஆங்காங்கே, வனத்துறையினர் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.
ஆனால் சில நாட்களாக, போதிய பாதுகாப்பு இருக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன் விளைவாக, மற்றொரு சிறுவன் சிறுத்தைக்கு பலியாகியுள்ளார்.
பெங்களூரின் லக்கரேவில் வசிப்பவர் சுரேஷ். இவர் தன் குடும்பத்தினர், உறவினர்களுடன் மலை மஹாதேஸ்வரா மலைக்கு சென்றிருந்தார். நேற்று முன் தினம் அங்கு தங்கினர். நேற்று காலை 7:00 மணிக்கு இங்கிருந்து நாகமலைக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.
இன்டிகநத்தா கிராமம் அருகில், அடர்த்தியான வனப்பகுதி பாதையில் செல்லும் போது, புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை, சுரேஷின் மகன் ஹர்ஷித், 8, மீது பாய்ந்து தாக்கியது. அவரை இழுத்து கொண்டு, வனத்துக்குள் ஓடியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் அலறி, கூச்சலிட்டும் சிறுத்தை, சிறுவனை விடவில்லை.
மூன்று ஆடுகள் இது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், வனத்தில் தேடி சிறுவனின் உடலை கண்டுபிடித்தனர். இன்டிகநத்தா கிராமத்தின் ஹுச்சே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை, நேற்று முன் தினம் நள்ளிரவு, சிறுத்தை தாக்கி கொன்றது.
இதே சிறுத்தை தான், சிறுவன் ஹர்ஷித்தை இழுத்து சென்றிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு முன் பக்தர்கள், நாகமலைக்கு செல்ல வனத்துறையினர், காலை 7:00 மணிக்கு பின், டிக்கெட் கொடுத்தனர். ஆனால் நேற்று காலை 6:00 மணிக்கே டிக்கெட் கொடுத்ததால், இந்த சம்பவம் நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுத்தை தாக்குதலால், பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். மலை மஹாதேஸ்வரா மலைக்கு செல்லவே அஞ்சுகின்றனர்.
