அக்காவிடம் பேசிய அர்ச்சகரை அடித்துக் கொன்ற தம்பி கைது
அக்காவிடம் பேசிய அர்ச்சகரை அடித்துக் கொன்ற தம்பி கைது
ADDED : ஜன 22, 2026 05:50 AM
பெலகாவி: அக்காவிடம் பேச வேண்டாம் என்று கூறியும், மீறி பேசிய கோவில் அர்ச்சகரை, இரும்பு ராடால் அடித்துக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, பெலகாவி மாவட்ட எஸ்.பி., ராமராஜன் கூறியதாவது:
பெலகாவி மாவட்டம் முத்லகியின் ராஜாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் சுபாஷ், 23. கிராமத்தில் உள்ள சூனம்மா தேவி கோவிலின் அர்ச்சகர். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அர்ச்சகர் பேசி வந்தார்.
இது, இளம்பெண்ணின் 17 வயது தம்பிக்கு பிடிக்கவில்லை. தன் அக்காவுடன் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும், மஞ்சுநாத் கேட்கவில்லை. கடந்த, 19ம் தேதி அதிகாலையில், வீட்டில் இருந்து கோவிலுக்கு, அர்ச்சகர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கோவில் அருகே நின்றிருந்த இளம் பெண்ணின் தம்பி, அர்ச்சகர் மஞ்சுநாத்தை இரும்பு கம்பியால் தாக்கினார். நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, மீண்டும் இரும்பு கம்பியால் தலை மற்றும் முதுகில் அடித்தார். அர்ச்சகர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். சிறுவன் அங்கிருந்து தப்பியோடினார்.
இது தொடர்பாக கட்டபிரபா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், இளம்பெண்ணின் தம்பி கொலையாளி என்பது உறுதியானது. அவரை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்து, சிறுவர்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
