ADDED : செப் 01, 2025 10:13 PM
ஷிவமொக்கா : ஒன்பதாம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை சொந்த அண்ணனே, பலாத்காரம் செய்தது, விசாரணையில் தெரிந்தது.
ஷிவமொகா நகரில் வசிக்கும், 15 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். பள்ளிக்கு விடுமுறை போட்டு, வீட்டில் இருந்தார். ஆகஸ்ட் 30ம் தேதி, அவருக்கு வயிற்று வலி அதிகரித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தையையும், சிறுமியையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, தகவலறிந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஷிவமொக்கா நகர் போலீஸ் நிலையத்தில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு உடல் நலம் தேறியதும், அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அதிர்ச்சியான விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமியின், 16 வயது அண்ணன், 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். பெற்றோர் பணிக்கு சென்றிருந்தபோது, தனியாக இருந்த தங்கையை பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் சிறுமி பெற்றோரிடம் எதையும் கூறவில்லை.
சிறுமி ஏழு மாத கர்ப்பிணி என்பதை, பெற்றோரும் கவனிக்கவில்லை. பள்ளி சீருடை மீது கோட் அணிந்ததால், வயிறு பெருத்ததை பள்ளியிலோ, வீட்டிலோ தெரியவில்லை என்பதை சிறுமி விவரித்துள்ளார். சொந்த தங்கையை பலாத்காரம் செய்த மகன் மீது, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.