ADDED : மார் 16, 2026 06:56 AM
விஜயநகரா: சொத்துக்காக அண்ணனை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
விஜயநகரா மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகாவின், ஹகரிஷீரனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சாந்தம்மா, 48. அங்கன்வாடியில் பணியாற்றுகிறார். இவருக்கு மருளசித்தேஷ், 26, பத்ரிகவுடா, 24, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரை இழந்த சாந்தம்மா, மகன்களுடன் வசிக்கிறார். மூத்த மகன் மருளசித்தேஷ், வீட்டை நிர்வகித்ததுடன், நிலம், டிராக்டர்களை பார்த்து கொண்டார். ஆனால் இளைய மகன் பத்ரிகவுடா, எந்த பணிக்கும் செல்லவில்லை.
சொத்துகளை பிரித்து தரும்படி, தாய் மற்றும் அண்ணனுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 13ம் தேதி, இதே விஷயமாக வாக்குவாதம் செய்த பத்ரிகவுடா, 'எனக்கு சொத்தில் பங்கு தராவிட்டால், நான் பெங்களூருக்கு சென்று உழைத்து பிழைக்கிறேன்' என, கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
வருத்தம் அடைந்த மருளசித்தேஷ், தன் தம்பியின் நண்பர் நாரப்பா, 29, என்பவருடன் பைக்கில், தம்பியை தேடி சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அதிகாலை, ஹிரேமேகளகெரே அருகில், ஹொசஹள்ளி கிராஸ் அருகில் மருளசித்தேஷ், பைக் விபத்துக்குள்ளாகி இறந்து கிடப்பதாக, துாரத்து உறவினர் ஜெயப்பா என்பவர், சாந்தம்மாவுக்கு போன் செய்து கூறினார்.
அதிர்ச்சி அடைந்த சாந்தம்மா, அரசிகெரே அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மகன் மருளசித்தேஷின் உடலை காண சென்றார்.
அப்போது மகனின் உடலில் காயங்கள் இருப்பதை கவனித்தார். மகனுடன் அதே பைக்கில் சென்ற நாரப்பாவுக்கு எந்த காயமும் இருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து, தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, போலீசாரிடம் புகார் அளித்தார்.
அரசிகெரே போலீசார், விசாரணை நடத்திய போது, நடந்தது விபத்து அல்ல, கொலை என்பது தெரிந்தது. அண்ணன் மருளசித்தேஷை, நாரப்பாவுடன் சேர்ந்து, அடித்து கொலை செய்த பத்ரிகவுடா, விபத்து என நாடகமாடியது தெரிந்தது. அவரையும், நாரப்பாவையும் போலீசார் கைது செய்தனர்.
