கிரிக்கெட் மட்டையால் அடித்து தங்கை கொலை அண்ணன் கைது
கிரிக்கெட் மட்டையால் அடித்து தங்கை கொலை அண்ணன் கைது
UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 10:30 PM
பெல்லந்துார்: வீட்டை காலி செய்யும் விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், கிரிக்கெட் மட்டையால் தங்கையை அடித்து கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பெல்லந்துாரின், ஜுன்னசந்திராவில் குடும்பத்துடன் வசிப்பவர் ஜெயராம், 43. இவர் வக்கீலாக பணியாற்றுகிறார்.
இவரது தங்கை மீனாட்சி, 39, என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அண்ணன் ஜெயராமின் வீட்டு எதிரில் இருந்த ‘ஷீட்’ வீட்டில், தன் குழந்தைகளுடன் மீனாட்சி வசித்து வந்தார். அவர், அந்த வீட்டில் இருப்பதை ஜெயராமுக்கு விருப்பம் இல்லை. வீட்டை காலி செய்து விட்டு, எங்காவது செல்லும்படி தங்கையுடன் தகராறு செய்தார்.
இந்நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு, ஜெயராமின் மனைவி, வேண்டுமென்றே ஜன்னல் வழியாக, மீனாட்சி மீது தண்ணீரை வீசினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அப்போதும் ஜெயராமின் மனைவி, வீட்டை காலி செய்யும்படி மீனாட்சியிடம் சண்டை போட்டார். அதன்பின், சம்பவத்தை கணவரிடம் கூறினார். கோபமடைந்த ஜெயராம், கிரிக்கெட் மட்டையால் தங்கை மீனாட்சியின் மண்டையில் அடித்து கொலை செய்தார்.
தகவலறிந்து அங்கு வந்த, பெல்லந்துார் போலீசார் உடலை மீட்டு, ஜெயராமை கைது செய்தனர்.
