/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுவனை காப்பாற்றி உயிரிழந்த சகோதரர்கள்
/
சிறுவனை காப்பாற்றி உயிரிழந்த சகோதரர்கள்
ADDED : அக் 27, 2025 03:52 AM

மைசூரு: மை சூரில் கால்வாயில் மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய சகோதரர்கள் இருவரும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி இறந்தனர்.
மைசூரு மாவட்டம், படகலஹுந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் நந்தன், 25. ரமேஷ் சகோதரர் ரவி மகன் ராகேஷ், 20. அதே கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன், நரசிப்பூர் சாலையில் உள்ள வருணா கால்வாயில் இருந்து பாசனத்துக்கு செல்லும் துணை கால்வாயில் நேற்றுமுன்தினம் குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நந்தனும், ராகேஷும் கவனித்தனர். உடனடியாக கால்வாயில் குதித்து, அச்சிறுவனை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்நேரத்தில் கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகரித்தது. இருவருக்கும் நீச்சல் தெரிந்திருந்தாலும், தண்ணீரின் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அச்சிறுவன், கிராமத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த அவர்கள், கால்வாயில் பாயும் தண்ணீரை நிறுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதுபோன்று போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு படையினர், கால்வாயில் மிதந்த இருவரின் சடலத்தையும் மீட்டனர். இதில் உயிரிழந்த நந்தன், 15 நாட்களுக்கு முன்தான் காதல் திருமணம் செய்திருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

