ADDED : மே 13, 2025 12:18 AM

தங்கவயல்: தங்கவயலில் மஹாபோதி அசோக தம்ம புத்தர் கோவிலில் 2569ம் ஆண்டு புத்த ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
காலையில் கொடியேற்றல், போதி மரத்து பூஜை, புத்த பூஜ்யா கெமண்டோ, பெங்களூரு மகாபோதி சங்க ஆசிரியர் பிக்கு பூஜ்யா ராகமா ஆனந்த பந்தேஜி முன்னிலையில் தியானமும், பஞ்ச சீலமும் ஓதினர்.
பின், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி, பிஸ்கட் வழங்கப்பட்டன.
மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.பிரபுராம் வரவேற்று பேசுகையில், ''கர்நாடகாவில் புத்த ஜெயந்தியையும் அரசு கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டிருந்தது. முதல் முறையாக நேற்று அனைத்து மாவட்டங்கள், தாலுகாக்களில் கொண்டாடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றார்.
டாக்டர் பூர்ணேஷ்ராஜு தலைமை வகித்து பேசுகையில், ''மனித வாழ்வுக்கு மிக அவசியமான புத்தரின் ஐந்து கட்டளைகளை பின்பற்றினால் போதும். திருடாதே; பொய் சொல்லாதே; கொலை செய்யாதே; ஆசையை கை விடு. ஒழுக்கம் தான், சிறந்த மனிதராக அடையாளம் காட்டும். மன நிறைவுக்கு புத்தமே சிறந்த பாதை,'' என்றார்.
நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, டாக்டர்கள் எச்.என்.சுரேஷ்குமார், வசந்த குமார், சித்தார்த் கல்வி நிறுவன நிர்வாகி சந்திரசேகர், எஸ்.மதிவாணன், பிரதாப்குமார், கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.