கப்பன் பூங்காவில் கட்டட பணிகள் நடைபயிற்சியாளர் சங்கம் ஆட்சேபம்
கப்பன் பூங்காவில் கட்டட பணிகள் நடைபயிற்சியாளர் சங்கம் ஆட்சேபம்
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM

பெங்களூரு: கப்பன் பூங்கா வளாகத்தில், சட்ட விரோதமாக கட்டடம் கட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கப்பன் பூங்கா நடை பயிற்சியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நடைபயிற்சியாளர்கள் சங்கத்தலைவர் உமேஷ் கூறியதாவது:
வரலாற்று பிரசித்தி பெற்ற கப்பன் பூங்காவின், வெங்கடப்பா ஆர்ட் கேலரி பின்பகுதியில், சட்ட விரோதமாக கட்டட பணிகள் நடக்கின்றன. பூங்காவுக்குள் கட்டட பணிகள் நடப்பதால், அங்குள்ள இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்து, லோக் ஆயுக்தாவில் புகார் அளிப்பதுடன், நீதிமன்றத்திலும் பொது நலன் மனு தாக்கல் செய்வோம்.
கப்பன் பூங்கா பாதுகாப்புக்காக, சமூக ஆர்வலர்களும், நடைபயிற்சியாளர்கள் சங்கமும் எப்போதும் போராட்டம் நடத்த முடியாது. தோட்டக்கலைத்துறை, போலீஸ் துறை உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். கட்டடம் கட்டப்படுவதை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை. எந்த காரணத்தை கொண்டும், பூங்காவின் பாரம்பரிய வடிவம் மாறக்கூடாது.
அடிப்படையில், 333 ஏக்கர் பரப்பளவுள்ள கப்பன் பூங்கா, நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படுவதால், கட்டடங்கள் கட்டப்படுவதால், 196 ஏக்கராக குறைந்துள்ளது.
பூங்காவை பாதுகாப்பதற்கு பதில், அரசு துறைகளே சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டுகின்றன. தொல்பொருள் துறையே, வெங்கடப்பா ஆர்ட் கேலரி பின்புறம், பெரிய கட்டடம் கட்ட அஸ்திவாரம் போடுகிறது.
கர்நாடக பூங்காக்கள் சட்டப்படி, லால்பாக், கப்பன் பூங்கா வளாகத்தில் அரசோ அல்லது தனியாரோ புதிய கட்டடம் கட்ட, அனுமதி இல்லை. இதற்கு முன், 2019ல் உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட. முடிவு செய்யப்பட்ட போது, பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அன்றைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கப்பன் பூங்காவில் ஒரு செங்கல்லை கூட வைக்க விட முடியாது என, உத்தரவிட்டார். இப்போது மீண்டும் கட்டட பணிகள் நடத்துவது, நீதிமன்ற உத்தரவு மீறலாகும். கட்டட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தோட்டக்கலை துறை அதிகாரிகள், ‘தற்போது நடப்பது வெங்கடப்பா ஆர்ட் கேலரி சம்பந்தப்பட்ட பணிகளாகும். இதற்காக பூங்கா பாதுகாப்பு கமிட்டியிடம், அனுமதி கேட்கப்பட்டுள்ளது’ என்றனர்.
