UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM

– நமது நிருபர் –
பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றிய பெண், அந்த வேலையை விட்டு கணவருடன் சேர்ந்து சுயதொழில் துவங்கி, வெற்றிகரமாக நடத்துகிறார். ஒன்பது மாதங்களில், 56 லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளது.
பெங்களூரில் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் தியா. இவரது கணவர் ஆதித்யா. கணவன் – மனைவி இருவருமே பெங்களூரில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்தவர்கள். ஒரே ஐ.டி., நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினர். பணி அழுத்தத்துக்கு இடையே, ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, மிகவும் கஷ்டமாக இருந்தது. பல நாட்கள் ரெஸ்டாரென்ட்களில், ஆன்லைன் வழியாக உணவு ஆர்டர் செய்து கொண்டனர். நேரம் கிடைக்கும் போது, தியா வீட்டில் சமைப்பார். ஆனால் பணிக்கு சென்றதால், அவருக்கு சமையல் செய்ய நேரம் இல்லை. பல்வேறு ரெஸ்டாரென்ட்களில், வேறு நாடுகளின் விதவிதமான உணவுகள் கிடைக்கின்றன.
ஆனால், தம்பதிக்கு ஆரோக்கியமான இந்திய உணவு தேவைப்பட்டது.
கைக்கு எட்டும் விலையில், ஆரோக்கியமான உணவு கிடைக்காததால், தியா, தன் கணவர் ஆதித்யாவுடன் சேர்ந்து, உணவு தயாரித்து விற்கும் தொழிலை துவக்க விரும்பினார்.
அதன்படி, 2024 செப்டம்பரில், ‘வெல்பெட்’ என்ற பெயரில் தொழிலை துவக்கினர். தங்களின் சேமிப்பு தொகையில், 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்தனர். ஊட்டச்சத்து உணவு வல்லுநர், சமையல் ஊழியர், டெலிவரி ஊழியர்களை நியமித்தனர்.
முதற்கட்டமாக தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உணவு தயாரித்து கொடுத்தனர். அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெங்களூரின் உணவு வல்லுநர் ஒருவர், வெல்பெட் குறித்து வீடியோ வெளியிட்டார். இது பரவியதில் 100 வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
நடப்பாண்டு, எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், சமையல் செய்வது கஷ்டமாக இருந்தது. தற்போது வேகமாக வளர்கிறது. பருப்பு, சோளம் ரொட்டி, சோலே சாட் பனீர், சோயா உட்பட, ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சிக்கன் ரோல், பிரியாணி, சீன நாட்டு உணவுகளும் கிடைக்கின்றன.
திங்கள் முதல், சனிக்கிழமை வரை உணவு கிடைக்கிறது. ஒரு உணவுக்கு, 289 ரூபாய் பெறுகின்றனர். தரமான உணவுடன், பேக்கிங் விஷயத்திலும் தம்பதி மிகவும் அக்கறை காட்டுகின்றனர். பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நோக்கில், மஹாராஷ்டிராவில் இருந்து ஸ்டீல் லைனிங் கொண்ட, மறு சுழற்சி செய்யக்கூடிய டப்பாக்களை வரவழைத்துள்ளனர். இந்த டப்பாக்களில் உணவு வழங்குவதால், வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உணவு என்ற உணர்வு ஏற்படுகிறது.
தன் கணவருடன் இணைந்து, தியா வெற்றிகரமாக தொழிலில் முன்னேறுகிறார். தொழிலை கவனிப்பதுடன் எம்.பி.ஏ., படித்து வருகிறார்.
இதுபற்றி, தியா கூறியதாவது:
வெல்பெட் ஆரம்பமான முதலாவது ஆண்டில், 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, 56 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கினோம்.
நாள் முழுதும் பணியாற்றி விட்டு, வீட்டிலும் சமையல் செய்வது கஷ்டம். எங்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காததால், நாங்களே தொழிலை துவக்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
