/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு!: கோடை விடுமுறையால் திருடர்கள் அட்டகாசம்
/
பெங்களூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு!: கோடை விடுமுறையால் திருடர்கள் அட்டகாசம்
பெங்களூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு!: கோடை விடுமுறையால் திருடர்கள் அட்டகாசம்
பெங்களூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு!: கோடை விடுமுறையால் திருடர்கள் அட்டகாசம்
ADDED : ஏப் 15, 2025 06:57 AM

பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பணம், நகைகளை திருடுவது, முகமூடி அணிந்து, கத்தி, துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையடிப்பது அதிகரிக்கிறது. குறிப்பாக வீட்டில் நியமிக்கப்பட்ட பணியாட்களே கொள்ளை அடிக்கும் சம்பவங்கள், பெங்களூரில் அதிகரிக்கிறது. ஓரே ஆண்டில் 20 சதவீதம் இந்த குற்றங்கள் அதிகரித்ததாக, போலீஸ் துறை புள்ளி - விபரங்கள் கூறுகின்றன.
பகல் நேரத்தில், சாலைகளில் சுற்றி வந்து வீடுகளை நோட்டம் விடுகின்றனர். பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டு, இரவு கூட்டாளிகளுடன் வந்து கை வரிசையை காட்டுகின்றனர். இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த, போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதற்கு வீட்டு உரிமையாளர்களின் அலட்சியமும் காரணமாக உள்ளது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பூட்டிய வீடுகளை மர்ம கும்பல் குறி வைக்கிறது. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது, அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கும்படி, போலீஸ் துறை பல முறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதை வீட்டு உரிமையாளர்கள் பின்பற்றுவது இல்லை.
முன்கூட்டியே தகவல் தெரிந்தால், சம்பந்தப்பட்ட வீடுகள் உள்ள சாலைகளில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும். மர்ம கும்பலுக்கு பயம் ஏற்படும். திருட்டை தடுக்கலாம். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை உள்ளது.
இதனால், சுற்றுலா, வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகம். இந்த சந்தர்ப்பத்தை திருடர்கள் சாதகமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம், தங்க நகைகளை திருடர்களிடம் பறிகொடுக்க நேரிடும்.
பணக்கார குடும்பத்தினர், பணிக்கு செல்லும் தம்பதியர், தொழிலதிபர்கள் என, பலரும் குறைந்த ஊதியத்துக்கு, வெளி மாநிலத்தவரை பணிக்கு நியமிக்கின்றனர். அவர்களை நம்பி வீட்டின் பொறுப்பை விட்டு செல்கின்றனர். பல வீடுகளில் பணியாட்களே திருடர்கள் என்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வீட்டு பணியாட்கள் திருடியது தொடர்பாக, 2023ம் ஆண்டில் 230 வழக்குகள், 2024ல் 382 வழக்குகள் பதிவாகின. 2023ல் வீடு புகுந்து திருடியது தொடர்பாக 878 வழக்குகள், 2024ல் 764 வழக்குகளும் பதிவாகின. நடப்பாண்டு மார்ச் வரை, 60 வழக்குகள் பதிவாகின. திருட்டை கட்டுப்படுத்த, தெற்கு மண்டல போலீசார், புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி, வீட்டை பூட்டி விட்டு, இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் செல்லும் போது, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை எண் 080 - 22943 3111 அல்லது 94808 01500 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, வீட்டின் போட்டோ, முகவரி, தொலைபேசி எண்ணுடன் தகவல் தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பர்.
ரோந்து போலீசார், பூட்டு போடப்பட்ட வீடுகளை கண்காணிப்பர். இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை மற்ற மண்டலங்களிலும் விஸ்தரிக்க ஆலோசிக்கிறோம்.
பெங்களூரில் ஈரானி, நேபாளி, ஓஜி குப்பம், பெட் ஷீட் கேங்க் கொள்ளை கும்பல்கள் உள்ளன. இந்த கும்பலை சேர்ந்தவர்கள், வீடுகளில் புகுந்து திருடுகின்றனர். கடந்த வாரம் தலகட்டபுரா போலீசார், நேபாளி கும்பலை சேர்ந்த ஐவரை கைது செய்தனர். பகலில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றிய ஐவரும், இரவு நேரத்தில் சதி திட்டம் தீட்டி, வீடுகளுக்குள் புகுந்து திருடியுள்ளர்.
தமிழகத்தின் ஓஜி குப்பம் கும்பலை சேர்ந்தவர்கள், மக்களின் கவனத்தை திசை திருப்பி, தங்கம், பணத்தை திருடுவர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கே.ஆர்.புரம், கொத்தனுார் பகுதிகளில் அதிகம் நடமாடுகின்றனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.